தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா - கனடா உறவு பற்றி பேசிய இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள்

2 mins read
748a8711-8ecf-47c3-a3e4-c06c163e1427
(இடது) இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்துடன் தொலைபேசியில் உரையாடினார். - படம்: என்டிடிவி

புதுடெல்லி: இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்துடன் தொலைபேசிவழி உரையாடியுள்ளார்.

இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவது பற்றி அவர்கள் இருவரும் கலந்துரையாடினர்.

அது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட திருவாட்டி அனிதா, இந்திய-கனடிய உறவு குறித்த ஆக்ககரமான கலந்துரையாடலுக்காக திரு ஜெய்சங்கருக்கு நன்றி கூறினார்.

இருநாட்டுப் பொருளியல் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது பற்றியும் அவர்கள் பேசியதாகக் குறிப்பிட்ட திருவாட்டி அனிதா, தங்களது ஒருங்கிணைந்த பணி தொடரும் என்று எதிர்பார்ப்பதாகச் சொன்னார்.

திருவாட்டி அனிதாவுடன் பேசியதைத் திரு ஜெய்சங்கரும் தமது எக்ஸ் தளத்தில் உறுதிப்படுத்தினார். இருநாட்டு உறவை முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகள் பற்றி உரையாடியதாக அவர் குறிப்பிட்டார்.

கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி இந்தியாவுடன் பொருளியல் உறவை ஆழமாக்கிக்கொள்ள முயல்கிறார். கனடா ஜூன் 15ஆம் தேதியிலிருந்து 17ஆம் தேதி வரை ஜி7 உச்சநிலைச் சந்திப்பை ஏற்று நடத்துகிறது.

இந்நிலையில், இந்தியரான கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி அனிதா, 58, அண்மையில் கனடாவின் வெளியுறவு அமைச்சராகப் பதவியேற்றார்.

கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குமுன் நாடாளுமன்றத் தேர்தல்களில் மிதவாதக் கட்சி வெற்றிபெற்றதை அடுத்து புதிய அமைச்சரவையை அறிவித்த பிரதமர் கார்னி, திருவாட்டி அனிதாவை வெளியுறவு அமைச்சராக நியமித்தார்.

புதிய கனடியப் பிரதமர் கார்னிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து கூறினார். இருநாடுகளையும் சேர்ந்த மக்களுக்கிடையே உள்ள உறவை உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் மோடி, இன்னும் பெரிய வாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்ப்பதாகச் சொன்னார்.

கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆட்சியின்கீழ் கசந்த இந்திய-கனடா உறவைத் திரு கார்னியின்கீழ் மீண்டும் சீர்படுத்த இந்தியா முயல்வதாகத் தெரிகிறது.

பிரதமர் கார்னியும் இந்தியாவுடன் சீரான உறவை மீண்டும் ஏற்படுத்துவது தமது அரசாங்கத்தின் தலையாய கடமைகளில் ஒன்று எனவும் பிரசாரத்தின்போது கூறினார்.

கனடியர்களுக்கு இந்தியாவுடன் தனிப்பட்ட, பொருளியல் ரீதியான, உத்திபூர்வ உறவுகள் இருப்பதை அவர் சுட்டினார்.

2023ஆம் ஆண்டு கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்ற ஆடவர் கொலை செய்யப்பட்டதற்குப் பின்னால் இந்தியாதான் இருக்கிறது என்று முன்னாள் பிரதமர் ட்ரூடோ பகிரங்கமாகக் குறைகூறியதை அடுத்து இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.

குறிப்புச் சொற்கள்