புதுடெல்லி: தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கிலிருந்து டெல்லி சென்ற பிரிட்டிஷ்காரர் ஒருவர், அங்குள்ள இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தின் குடிநுழைவுப் பகுதியிலிருந்து நகருக்குள் தப்பியோடிவிட்டார்.
இதனையடுத்து, தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகக் காவல்துறை வெள்ளிக்கிழமை (நவம்பர் 7) தெரிவித்தது.
இந்தச் சம்பவம் அக்டோபர் 28ஆம் தேதி நடந்தது. தப்பியோடியவர் ஃபிட்ஸ் பேட்ரிக் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தாய்லாந்திலிருந்து பிரிட்டனுக்கு நாடுகடத்தப்படவிருந்த நிலையில், விமானம் டெல்லியில் தரையிறங்கியதும் பேட்ரிக் தப்பிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. உரிய நடைமுறைகளை முடிக்காமல் குடிநுழைவுப் பகுதியிலிருந்து நழுவிய அவர், பின்னர் விமான நிலைய வளாகத்திலிருந்தும் தப்பியதாகக் காவல்துறை விளக்கியது.
இச்சம்பவம் கடுமையான பாதுகாப்புக் குறைபாடாகக் கருதப்படுகிறது.
இவ்விவகாரம் தொடர்பில் காவல்துறை புகார் பதிந்து, சம்பந்தப்பட்ட விமான நிறுவன ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளது.
விமான நிலையப் பாதுகாப்பிற்குப் பொறுப்பான மத்தியத் தொழிலகப் பாதுகாப்புப் படையினரும், குடிநுழைவுத் துறையினரும், காவல்துறையினரும் இணைந்து, தப்பியோடிய பேட்ரிக்கைத் தேடிப் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
அவர் தப்பிச்செல்ல வழிவகுத்த பாதுகாப்புக் குறைபாடுகளை அடையாளம் காண்பதற்காக விமான நிலையக் கண்காணிப்புப் படக்கருவிகளில் பதிவான காணொளிகளும் ஆராயப்பட்டு வருகின்றன.
தொடர்புடைய செய்திகள்
தப்பியோடியவரின் நோக்கம், பின்னணி போன்றவை குறித்தும் விசாரித்து வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.

