பிரிட்டனிலிருந்து வெளியேறுபவர்களில் இந்தியர்கள் முதலிடம்

2 mins read
5681cd70-d015-49fe-8a30-0ff225d389fd
வெளிநாட்டவர்களுக்கு எளிதில் வேலை வாய்ப்பு, படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்ததால் ஏராளமான வெளிநாட்டினர் பிரிட்டனில் குடியேறினர். - படம்: ஊடகம்

புதுடெல்லி: பிரிட்டனிலிருந்து வெளியேறும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது.

வெளிநாட்டவர்களுக்கு எளிதில் வேலை வாய்ப்பு, படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்ததால் ஏராளமான வெளிநாட்டினர் பிரிட்டனில் குடியேறினர்.

இவ்வாறு வெளிநாட்டினரை ஈர்த்துவந்த பிரிட்டனுக்கு அதுவே சிக்கலாகவும் மாறிவிட்டது. வெளிநாட்டினரின் எண்ணிக்கை 39 விழுக்காடாக அதிகரித்ததால் பிரிட்டனில் அந்நாட்டுக் குடிமக்கள் சிரமப்படுவதாக அரசு தெரிவித்தது.

பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான அரசு, நாட்டுக்குள் நுழைவதற்கான விசா விதிமுறைகளைக் கடுமையாக்கி இருந்தது. இதனால், பிரிட்டனில் நிகரக் குடியேற்றம் குறைந்தது. இதற்கிடையே, பிரிட்டன் தேசியப் புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்ட தகவல்கள் பேசுபொருளாக மாறியுள்ளன.

2023ஆம் ஆண்டில் பிரிட்டனில் 9.4 லட்சமாக இருந்த நிகரக் குடியேற்றம், தற்போது 2 லட்சமாகக் குறைந்துவிட்டது. கடந்த ஈராண்டுகளில் மட்டும் 7 லட்சம் பேர் அந்நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

குறிப்பிடும்படியாக, கடந்த ஜூன் வரையிலான காலகட்டத்தில் பிரிட்டனை விட்டு வெளியேறியவர்களில் இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

மாணவர் விசா ஏற்பாட்டில் தங்கியிருந்த 45,000 பேர், பணி விசாக்களில் இருந்த 22,000 பேர் உள்பட 75,000 பேர் பிரிட்டனை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக, சீனர்கள் அதிக எண்ணிக்கையில் வெளியேறுவது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் ஒருபுறம் இருக்க, பிரிட்டனுக்குப் பயணம் மேற்கொள்ள வழங்கப்படும் விசாக்களின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் வரை 37 லட்சம் விசாக்கள் வழங்கப்பட்ட நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது 39 விழுக்காடு வரை சரிவு கண்டுள்ளது.

பிரிட்டன் குடியேற்றப் பட்டியலில் ஐரோப்பா இல்லாத நாடுகளில் இந்தியாவே முதல் இடத்தில் உள்ளது.

வெளிநாட்டவர் எண்ணிக்கை குறைந்திருப்பது குறித்து பிரிட்டிஷ் பிரதமர் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் என்றும் அதேசமயம், திறன் வாய்ந்த ஊழியர்கள் வெளியேறுவது அந்நாட்டு அரசுக்குப் பாதகமாக அமையும் என்றும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்