சுவாரஸ்யமான வனவிலங்கு படங்களைப் பகிர்வதில் பெயர்போன இந்திய வனப்பகுதி சேவை அதிகாரி சுசந்தா நந்தா, அண்மையில் கருநாகம் ஒன்றைக் காட்டும் காணொளியை டுவிட்டரில் பகிர்ந்தார். அது இணையவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
காணொளியைப் பகிர்ந்து, அதுகுறித்து பதிவிட்ட அவர், "அந்த கருநாகத்தால் உண்மையிலேயே எழுந்து நின்று, வளர்ந்த மனிதர் ஒருவரை நேருக்குநேர் பார்க்க முடிந்தது. அதை யாராவது எதிர்த்தால், அதன் உடலின் மூன்றில் ஒரு பங்கை தரையிலிருந்து உயர்த்த முடியும்," என்றார்.
அந்தக் காணொளியில், கருநாகம் நிமிர்ந்த நிலையில் காணப்பட்டது. திங்கட்கிழமை பகிரப்பட்டதிலிருந்து, டுவிட்டரில் அது 150,000க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது. இணையவாசிகள் பலரும் தங்கள் கருத்துகளையும் பதிவுசெய்துள்ளனர்.
"ஒரு மனிதரின் உயரத்திற்கு இந்தக் கருநாகம் எழுந்து நிற்கிறது. அதற்கு முன்னால் ஒருவர் நின்றால், அவர் எதிர்நோக்கும் ஆபத்தைக் கற்பனை செய்து பார்க்க முடிகிறது," என்று பயனாளர் ஒருவர் கருத்துரைத்தார்.
"பயமுறுத்தும் காட்சி," என்று வேறொருவர் கூறினார்.
"பொதுவாக பாம்புகள் நம் கவனத்தை ஈர்க்க வல்லவை. ஆனால், இந்தக் கருநாகம் வாயைப் பிளக்க வைக்கிறது," என்று மற்றொரு பயனாளர் பதிவிட்டார்.
உலகிலேயே அதிக விஷமுள்ள பாம்புகளில் ஒன்று கருநாகம். விஷத்தன்மை உடைய நீளமான பாம்புகளிலும் அது அடங்கும்.
பெரிய கருநாகம் 10 முதல் 12 அடி நீளம் வரை இருக்கும். அதன் எடை 9 கிலோகிராம் வரை போகலாம். ஒரே கடியில் அது கக்கும் விஷத்தன்மை 20 பேரைக் கொல்வதற்குப் போதுமானது.