டாக்கா: பங்ளாதேஷில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து அனைத்துலக குற்றவியல் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.
பங்ளாதேஷில் மாணவர் போராட்டத்தை அடுத்து பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தங்கியிருக்கிறார். அந்நாட்டில் அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு உள்ளன. அவற்றில் முன்னிலையாக வேண்டும் என நீதிமன்றங்கள் ஆணை பிறப்பித்துள்ளன. அவரை நாடு கடத்தும்படி முகமது யூனுஸ் தலைமையிலான பங்ளாதேஷ் இடைக்கால அரசு இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
மாணவர்கள் போராட்டம் தொடர்பாக ஷேக் ஹசீனா கருத்து தெரிவித்து இருந்தார். இது தொடர்பாக அவருக்கு எதிராக கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி அரசு வழக்கறிஞர் அனைத்துலகக் குற்றங்களை விசாரிப்பதற்கென்று அமைக்கப்பட்ட அனைத்துலக குற்றவியல் தீர்ப்பாயத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த தீர்ப்பாயம், ஷேக் ஹசீனாவுக்கு ஆறுமாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பினை முகமது கோலம் மோர்டுசா மொசும்தர் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கியது. பிரதமர் பதவியில் இருந்து ஹசீனா பதவி விலகி 11 மாதங்கள் ஆன நிலையில் அவருக்கு எதிராக வழங்கப்பட்ட முதல் நீதிமன்ற தண்டனை இதுவாகும்.