ஜெய்ப்பூர்: ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் ஒருவர், தமது 71ஆவது வயதில் பட்டயக் கணக்காளர் (சிஏ) தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
ராஜஸ்தானைச் சேர்ந்த தாராசந்த் அகர்வால் என்ற அவர், கடந்த 1976ல், ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் ஜெய்ப்பூரில் பணியில் சேர்ந்தார். இவருக்கு தர்ஷனா என்ற மனைவியும் லலித், அமித் என இரு மகன்களும் உள்ளனர்.
மகன் லலித்தும் சிஏ முடித்து டெல்லியில் பணியாற்றுகிறார். இளைய மகன் அமித் வருமானவரித் துறை அதிகாரி.
38 ஆண்டுகளாக வங்கியில் பணியாற்றி வந்த அகர்வால், கடந்த 2014ஆம் ஆண்டு உதவி பொதுமேலாளராக பணி ஓய்வு பெற்றார்.
கடந்த 2020ஆம் ஆண்டு இவரது மனைவி தர்ஷனா காலமானார். இதையடுத்து, மன அமைதிக்காக பகவத் கீதையை வாசிக்கத் துவங்கினார் தாராசந்த்.
மேலும், ‘சிஏ’ படித்து வந்த தனது பேத்திக்குப் பாடங்களைச் சொல்லித் தந்துள்ளார். அப்போது தானும் முனைவர் பட்டம் பெற வேண்டும் என்ற ஆசை தாராசந்த் மனதில் துளிர்விட்டுள்ளது.
ஆனால் அவரது மகன்கள், பேரக்குழந்தைகள் இளையர்கள் சவாலாகக் கருதும் பட்டய கணக்காளர் (சிஏ) படிப்பு படிக்குமாறு ஊக்கமளித்தனர்.
இதையடுத்து, கடந்த 2021 ஜூலையில் சிஏ தேர்வுக்கு தன் பெயரைப் பதிவு செய்த தாராசந்த், தனக்கு இருந்த தோள் வலியைப் பொருட்படுத்தாமல் நாள்தோறும் பத்து மணி நேரம் கடுமையாக படித்து தேர்வுக்குத் தயாரானார் என்றும் அதன் பலனாக கடந்த ஆண்டு நடந்த இறுதிக்கட்டத் தேர்வில் வெற்றி பெற்றார் என்றும் மகன் லலித் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
அத்தேர்வில் இந்தியா முழுவதும் தேர்ச்சி பெற்ற 12,474 பேரில் தாராசந்தும் ஒருவர். சிஏ படிப்புக்காக இவர் பயிற்சி வகுப்புக்குச் செல்லவில்லை. வீட்டிலேயே படித்து தேர்ச்சி பெற்றுள்ளார்.