கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்னர் சுனாமியால் தமிழ்நாட்டின் கீச்சான்குப்பத்தில் பேரழிவு ஏற்பட்டது.
சிதைவுகளுக்கிடையே சிக்கி அழுதுகொண்டிருந்த மீனா என்ற சிறுமியை, அப்போது நாகப்பட்டினத்தின் ஆட்சியராக இருந்த ஜே.ராதாகிருஷ்ணன் கண்டுபிடித்தார்.
நாகப்பட்டினத்தின் அன்னை சத்யா அரசாங்க சிறுவர் இல்லத்தில் அச்சிறுமி சேர்க்கப்பட்டாள்.
இன்று, 20 ஆண்டுகள் கழித்து, மீனாவின் வளர்ப்புப் பெற்றோராக ராதாகிருஷ்ணனும் அவரின் மனைவி கிருத்திகாவும் அழகான ஒரு திருமணத்தை தங்களின் மகளுக்காக நடத்தினர்.
அரசாங்க சிறுவர் இல்லத்தில் மீனாவைச் சேர்த்த பின்பும் ராதாகிருஷ்ணனும் அவரின் மனைவியும் தொடர்ந்து சிறுமிக்கு ஆதரவு வழங்கினர்.
பலமுறை பணி காரணமாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டபோதும், ராதாகிருஷ்ணனும் அவரின் மனைவியும் மீனாவுடன் தொடர்பில் இருந்து, தாதி ஆகும் கனவை நனவாக்க உதவினர்.
இன்ஸ்டகிராமில் ராதாகிருஷ்ணனன் உணர்வுபூர்வமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
“நாகப்பட்டினத்தில் மனதை நெகிழவைத்த ஓர் ஒன்றுகூடல். மீனா, மணிமாறனின் திருமணத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி. நாகை சிறார்களுடன் எங்களது சுனாமிக்குப் பிந்திய பயணம், என்றுமே நம்பிக்கை நிறைந்தது. அவர்கள் வளர்வது, படிப்பது, பட்டம் பெறுவது, அழகானதொரு வாழ்க்கையை அமைத்துக்கொள்வது இவையெல்லாம் ஆனந்தக் கண்ணீரைக் கொண்டு வருகின்றன. சௌமியா, சுபாஷ், சாரா ஆகியோர் தங்களின் அன்புத் தோழியின் முக்கியமான நாளைக் கொண்டாடுவதைப் பார்ப்பதில் இன்பம். ஞாபகத்தில் நிறுத்த வேண்டிய ஒரு நாள். ரத்த பந்தத்துக்கும் அப்பால் ஒன்றிணைந்த ஒரு குடும்பம்,” என்று பதிவிட்டிருந்தார் அவர்.

