கோல்கத்தா: மேற்கு வங்க சட்டமன்றத்தின் முன்னாள் துணைச் சபாநாயகர் ஆஷிஷ் பானர்ஜி, 74, தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாம் அரசியலில் ஈடுபட்டது தவறு என்றும் ஊழல் ஏதும் செய்யவில்லை என்றும் அவர் எழுதிய குறிப்பு கிடைத்திருப்பதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேற்கு வங்கத்தின் ராம்புர்ஹட் சட்டமன்றத் தொகுதியில் 2001 முதல் 2026 வரை தொடர்ந்து ஐந்து முறை திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திரு ஆஷிஷ் பானர்ஜி. திருவாட்டி மம்தா பானர்ஜி தலைமையிலான அரசில் அமைச்சராகவும் சட்டமன்றத் துணைச் சபாநாயகராகவும் அவர் பதவி வகித்தார்.
பிர்பூம் நகரில் தமது வீட்டுக்கு அருகில் உள்ள திரிணாமூல் கட்சியின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 16) காலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக அவர் கண்டெடுக்கப்பட்டார். அப்போது காவல்துறையினர் அவர் எழுதியதாக நம்பப்படும் கையெழுத்துப் பிரதியை அங்கிருந்து கைப்பற்றினர்.
அந்த ஒரு பக்கக் கடிதம் வங்க மொழியில் எழுதப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதில், “எனது மரணத்துக்கு யாரும் பொறுப்பில்லை. நான் எப்போதுமே ஊழலில் ஈடுபட்டதில்லை. எந்தவொரு வேலைக்காகவும் யாரிடமும் பணம் வாங்கியது இல்லை. திரிணாமூல் கட்சிக்குள் நடந்த சில தவறுகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் அவற்றுக்கு எதிராக என்னால் குரல் கொடுக்க முடியவில்லை,” என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும், “தாராபித்-ராம்புர்ஹட் மேம்பாட்டு ஆணையத்தின் ஒப்பந்தப்புள்ளி தொடர்பான முடிவுகள், காசோலை வழங்குதல், திட்ட ஒப்புதல்கள் அல்லது தடையில்லாச் சான்றிதழ் வழங்கியதில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை. என்னைக் களங்கப்படுத்த எடுக்கப்பட்ட செயல்களைக் கண்டிக்கிறேன். நான் அரசியலுக்கு வந்தது தவறு என்று உணர்கிறேன். வருங்காலத்தில் என் குடும்பத்தைச் சேர்ந்த இளையர்கள் அரசியலில் ஈடுபட வேண்டாம்,” என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இவ்வேளையில், திரு ஆஷிஷ் பானர்ஜி பொதுச்சேவைக்காகத் தம் வாழ்நாளை அர்ப்பணித்தவர் என்று கூறிய திரிணாமூல் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி, திரு ஆஷிஷ்மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, சில நாள்களாக அவர் துன்புறுத்தப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.


