தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

1 mins read
99dee7e9-e199-4c61-9ab4-80366d8072b0
சிபு சோரன். - படம்: ஊடகம்

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் முத்தி மோர்ச்சா கட்சித் தலைவருமான சிபு சோரன் காலமானார். அவருக்கு வயது 81.

இத்தகவலை அவரது மகனும் அம்மாநிலத்தின் முதல்வருமான ஹேமந்த் சோரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரகப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்த சிபு சோரன், கடந்த ஓராண்டுக்கும் மேலாக டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் காலமானதாகத் தெரிவிக்கப்பட்டது. கடந்த 2005 முதல் மூன்று முறை ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று அம்மாநில முதல்வராகப் பொறுப்பு வகித்தார் சிபு சோரன்.

ஆனால், மூன்று முறையும் அவரால் தனது பதவிக்காலத்தை முழுமையாக முடிக்க இயலவில்லை. குறிப்பாக, 2005ஆம் ஆண்டு அவரது பதவிக்காலம் ஒன்பது நாள்கள் மட்டுமே நீடித்தது.

கடந்த 2004 முதல் 2006 வரை மத்திய நிலக்கரித்துறை அமைச்சராகப் பணியாற்றி உள்ளார் சிபு சோரன். மேலும், மக்களவைக்கு ஆறு முறையும் மாநிலங்களவைக்கு மூன்று முறையும் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமையும் இவருக்குண்டு.

இவரது மறைவை அடுத்து, பிரதமர் மோடி வெளியிட்ட இரங்கல் பதிவில், பழங்குடி சமூகங்கள், ஏழைகள் மற்றும் பொருளியல் ரீதியாக பின்தங்கியவர்களின் முன்னேற்றம் குறித்து சிபு சோரன் மிகவும் ஆர்வமுடையவராக இருந்ததாகவும் அவரது மறைவால் தாம் மிகுந்த வேதனை அடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்களும் தலைவர்களும் சிபு சோரன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்