வாக்காளர் பட்டியல் திருத்தம்: முன்னாள் நீதிபதிகள் குழு ஆய்வு

வாக்காளர் பட்டியல் திருத்தம்: முன்னாள் நீதிபதிகள் குழு ஆய்வு

கோப்புப்படம்: ஏஎன்ஐ

03 Oct 2026 - 5:53 pm

2 mins read

புதுடெல்லி: இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை (எஸ்ஐஆர்) விரிவாக ஆய்வு செய்ய, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் அடங்கிய தன்னிச்சை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பிற்கான வழக்கறிஞர்கள் சங்கம் என்ற அமைப்பு அக்குழுவை அமைத்துள்ளது.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் பி.லோக்குர் தலைமையில் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட அந்த ஆணையம், வாக்காளர் பட்டியலைத் திருத்தும் நடவடிக்கையின் அரசமைப்பு, சட்டப்பூர்வ செல்லுபடித்தன்மை, செயல்முறைமை, தகுதியுள்ள வாக்காளர்கள் மீதான அதன் ஒட்டுமொத்த தாக்கம் ஆகியவை குறித்து ஆய்வு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக், ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பதர் துரேஸ் அகமத், முன்னாள் நீதிபதிகள் ரேகா சர்மா, அஞ்சனா பிரகாஷ் ஆகியோர் அந்த ஆணையத்தில் இடம்பெற்றுள்ள மற்ற நால்வர்.

தகுதியுள்ள குடிமக்கள் வாக்காளர் பட்டியலில் தக்கவைக்கப்பட்டுள்ளனரா, தகுதியற்ற பெயர்கள் முறையாகப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனவா என்பன உள்ளிட்ட பல முக்கியக் கூறுகளை ஆணையம் விரிவாக ஆராயும்.

மேலும், நீதிபதிகள் குழு நாடு முழுவதும் பயணம் செய்து பாதிக்கப்பட்ட குடிமக்களின் வாக்குமூலங்களையும் சமூக அமைப்புகள், வல்லுநர்களின் கருத்துகளையும் பதிவுசெய்யத் திட்டமிட்டுள்ளது.

தனது கண்டுபிடிப்புகளுக்கும் பரிந்துரைகளுக்கும் ஆணையமே பொறுப்பேற்கும் என்று அரசியலமைப்பிற்கான வழக்கறிஞர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கபில் சிபல், பிரசாந்த் பூஷண், சந்தர் உதய் சிங், பிரசாந்தோ சந்திர சென், ராஜு ராமச்சந்திரன், ரெபெக்கா மாமன் ஜான், வரிஷா ஃபராசத், பிருந்தா குரோவர் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் அந்த ஆணையத்திற்கு உத்திபூர்வ சட்ட ஆலோசனைகளை வழங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்