தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார்

2 mins read
2b1bd6a1-96cd-4552-ac09-ec6ec3821880
கர்நாடக மாநில முதல்வராக 1999 முதல் 2004 வரை செயல்பட்டவர் எஸ்.எம்.கிருஷ்ணா. - படம்: இந்திய ஊடகம்

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார். அவருக்கு வயது 92.

கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவு காரணமாக அவர் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) அதிகாலை 2.30 மணி அளவில் அவர் உயிரிழந்தார். கடந்த ஆண்டு அவரது அரசியல் பணியைப் போற்றும் வகையில் நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.

1932ல் கர்நாடக மாநிலத்தின் சோமஹல்லியில் பிறந்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் கல்வி பயின்றவர். கடந்த 1962ல் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். பிரஜா சோசியலிஸ்ட் கட்சி (1962-1971), காங்கிரஸ் கட்சி (1971 - 2017) மற்றும் பாஜகவில் (2017 - 2023) அவர் பணியாற்றி உள்ளார்.

கர்நாடக மாநில முதல்வராக 1999 முதல் 2004 வரை அவர் செயல்பட்டவர். அப்போது மாநில வளர்ச்சி சார்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்தார். பெங்களூரின் நவீன வளர்ச்சியில் இவரது பங்கும் உள்ளது. அதே நேரத்தில் மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திச் சென்றது மற்றும் காவிரி போராட்டம் உள்ளிட்ட நெருக்கடிகள் அவரது ஆட்சிக் காலத்தில் நிலவின.

2023ல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். வயது முதிர்வு காரணமாகத் தன்னால் எந்தக் கட்சிக்கும் பிரசாரம் செய்ய முடியாது எனத் தெரிவித்தவர். 2004 முதல் 2008 வரை மகாராஷ்டிரா மாநில ஆளுநராகவும், 2009 முதல் 2012 வரை அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சராகவும் பணியாற்றி உள்ளார்.

குறிப்புச் சொற்கள்