திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வரும் முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் உடல்நலக் குறைவால் ஜூலை 21ஆம் தேதி உயிரிழந்தார்.
101 வயதான அவர், பின்தங்கிய மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவர். கேரள அரசியலில் முக்கிய இடத்தை வகித்த அவர், கடந்த 2019ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொது வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில், ஜூன் 21ஆம் தேதி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சைப் பலனின்றி ஜூலை 21ஆம் தேதி பிற்பகல் 3.20 மணிக்கு உயிரிழந்தார். பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு அவரது உடல் சொந்த ஊரான ஆலப்புழாவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு இறுதிச் சடங்குகள் ஜூலை 23ஆம் தேதி அரசு மரியாதையுடன் நடைபெறவுள்ளது.
அவரின் மறைவுக்கு இந்தியப் பிரமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
கேரள முதல்வர் பினராயி விஜயன், அம்மாநில அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.