மும்பை: பாலியல் வன்கொடுமை வழக்கில் இந்தியப் புலனாய்வுச் சஞ்சிகையான தெஹல்காவின் முன்னாள் முதன்மைச் செய்தியாசிரியரான தருண் தேஜ்பால் குற்றவாளி என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கோவாவில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றின் மின்தூக்கியில், சக பெண் ஊழியரை வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக 62 வயதான தருண் தேஜ்பால்மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட அவர், உச்ச நீதிமன்றம் பிணை வழங்கும்வரை ஏழு மாதங்கள் சிறையில் இருந்தார்.
கடந்த 2021ஆம் ஆண்டு, கோவா விசாரணை நீதிமன்றம் அவரை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்தது.
ஆயினும், அத்தீர்ப்பை எதிர்த்து கோவா மாநில அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், மும்பை உயர் நீதிமன்றம் விசாரணை நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்து, அவரைக் குற்றவாளி என அறிவித்தது.
அவர் இரு வாரங்களுக்குள் சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, வியாழக்கிழமை (ஆகஸ்ட் 6) நீதிமன்றத்தில் முன்னிலையான தருண் தேஜ்பால், “எனக்கு 62 வயதாகிறது. நான் அரசியல் ரீதியிலான பழிவாங்கலுக்கு ஆளானவன்.
“எனக்கு மனைவி இருக்கிறார். இதற்குமேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
“மேல்முறையீடு செய்வது மட்டுமே எஞ்சியுள்ள ஒரே வழி. தயவுசெய்து என்மீது கருணை காட்டுங்கள். குறைந்தபட்ச தண்டனையை வழங்குங்கள்,” என முறையிட்டார்.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தீவிரமாக விவாதிக்கப்பட்ட காலத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
தெஹல்கா சஞ்சிகை சமூக நீதிக்கும் பெண்கள் உரிமைக்கும் குரல்கொடுத்து வந்த நிலையில், இச்சம்பவம் அதன் நம்பகத்தன்மையைப் பெரிதும் பாதித்தது.
புதிய நிர்வாகத்தின்கீழ் அச்சஞ்சிகை இயங்கி வந்தாலும், முந்தைய செல்வாக்கை மீண்டும் பெற இயலவில்லை.


