இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான டாக்டர் மன்மோகன் சிங், உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை (டிசம்பர் 26) இரவு காலமானார். அவருக்கு வயது 92.
வியாழக்கிழமை இரவு வீட்டில் சுயநினைவை இழந்ததைத் தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதுகுறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில், “இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானதை நாங்கள் ஆழ்ந்த துக்கத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
“வயது மூப்பு தொடர்பான மருத்துவப் பிரச்சினைகளுக்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. டிசம்பர் 26ஆம் தேதி அவருக்கு திடீரென சுயநினைவு இழப்பு ஏற்பட்டது. அவரை உயிர்ப்பிக்கும் முயற்சிகள் உடனடியாக வீட்டில் தொடங்கப்பட்டன. இரவு 8.06 மணிக்கு புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார்.
“அனைத்து முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும் அவரை உயிர்ப்பிக்க முடியவில்லை. அவரது உயிர் பிரிந்துவிட்டதாக இரவு 9.51 மணிக்கு அறிவிக்கப்பட்டது,” என்று தெரிவித்தது.
டாக்டர் சிங்கின் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அதிபர் திரௌபதி முர்மு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, திரு ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனின் ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர் டாக்டர் சிங். 1998 முதல் 2004 வரை மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராகச் செயலாற்றினார்.
2004 முதல் 2014 வரை 10 ஆண்டுகளுக்கு இந்தியப் பிரதமராக பதவி வகித்த அவர், நாட்டிற்குத் தேவையான பல முக்கிய சட்டங்களையும் திட்டங்களையும் செயல்படுத்தினார். சீக்கிய சமூகத்திலிருந்து பிரதமரான முதல் நபர் என்ற பெருமை அவரைச் சேரும். இந்திய வரலாற்றில் நெகிழ்வான பிரதமர் என அவர் போற்றப்படுகிறார். இந்தியப் பொருளியலைக் கட்டமைத்ததில் அவரது பங்கு மிகவும் முக்கியமானது.
தொடர்புடைய செய்திகள்
இவ்வாண்டு ஏப்ரலில் மாநிலங்களவையிலிருந்து (ராஜ்யசபா) ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, அவரின் அரசியல் பயணம் ஒரு முடிவுக்கு வந்தது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் உட்பட பல முக்கியப் பொறுப்புகளை டாக்டர் சிங் வகித்திருந்தார். அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ்வின் அமைச்சரவையில் 1991 முதல் 1996 வரை நிதி அமைச்சராக அவர் பணியாற்றினார்.
டாக்டர் சிங்கின் மறைவையொட்டி, வெள்ளிக்கிழமை (டிசம்பர் 27) நடைபெறவிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் ஏழு நாள்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு இந்திய அமைச்சரவை கூடுகிறது. டாக்டர் சிங்கின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரு மன்மோகன் சிங்கின் மறைவு குறித்து தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங், “டாக்டர் சிங் ஓர் அதிபுத்திசாலி. சிறந்த கொள்கைகளைக் கொண்ட அடக்கமான மனிதர். அவர் இந்தியாவுக்காகத் தம்மால் இயன்றதைச் செய்த ஓர் அதிகாரியாக இருந்து அரசியல்வாதியாக மாறியவர். வளர்ந்து வரும் ஆசியாவில் இந்தியா ஒரு முக்கிய தூணாக இருக்க வேண்டும் என்று நாங்கள் இருவரும் நம்பினோம். டாக்டர் சிங் சிங்கப்பூரின் நல்ல நண்பராகவும் இருந்தார். நாங்கள் எங்கள் தனிப்பட்ட மற்றும் நாடுகளின் இருதரப்பு உறவுகளை வளர்த்துள்ளோம்,” என்று தெரிவித்தார்.