புதுடெல்லி: மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சின் ஓய்வுபெற்ற விஞ்ஞானியும் முன்னாள் இயக்குநருமான 69 வயது முதியவரிடம் ‘மின்னிலக்கக் கைது’ மோசடி மூலம் ரூ.1.25 கோடி ஏமாற்றப்பட்டுள்ளது.
பிரதீப் குமார் தாஸ் என்னும் அந்த முன்னாள் விஞ்ஞானியை மோசடி செய்த கும்பல் கம்போடியா மற்றும் பிற தென்கிழக்காசிய நாடுகளைச் சேர்ந்த மோசடிக்காரர்களை உள்ளடக்கியது என்பது விசாரணையில் தெரியவந்தது.
அந்த அனைத்துலகக் குற்றக் கும்பல் கண்டறியப்பட்டு அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
டெல்லி காவல்துறையின் புலனாய்வுப் பிரிவு, ஆந்திரப் பிரதேசத்தில் 79 வயது முதியவர் சம்பந்தப்பட்ட மற்றொரு மின்னிலக்கக் கைது வழக்கில் ரூ.7.25 கோடியை மீட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், தற்போது நடைபெற்று வரும் மோசடி விசாரணைகளுடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகளில் இருந்த ரூ.1.96 கோடியை முடக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
டெல்லி காவல்துறை, பயங்கரவாத எதிர்ப்புப் படை மற்றும் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகளைப்போல ஆள்மாறாட்டம் செய்த நபர்களிடமிருந்து பிரதீப் குமாருக்கு அழைப்பு வந்தது.
பணமோசடி வழக்கு ஒன்றில் அவரது ஆதார் விவரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறிய அவர்கள், அவரைக் கைது செய்து விடுவதாக மிரட்டினர்.
அவரது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைச் சரிபார்ப்பதாகக் கூறி, சந்தேக நபர்கள் அவரது வங்கி விவரங்களைப் பெற்று, ஆர்டிஜிஎஸ் (RTGS) மூலம் ரூ.1,25,09,000 தொகையை மூன்று வங்கிக் கணக்குகளுக்கு மாற்ற வைத்துள்ளனர்.
மேலும், அவர்கள் அவரைத் தொடர்ந்து காணொளிக் கண்காணிப்பில் வைத்திருந்து, அவரது நடமாட்டத்தையும் கட்டுப்படுத்தியதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
டெல்லி துவாரகா வட்டாரத்தில் ஹோட்டல் அறை ஒன்றில் தங்கியிருந்த ஆள்மாறாட்டக் கும்பலைக் காவல்துறை அதிகாரிகள் சுற்றி வளைத்துக் கைது செய்தபோது முன்னாள் விஞ்ஞானியும் மோசடியில் சிக்கியது தெரியவந்தது.
73 கோடி ரூபாய் மோசடியில் அந்தக் கும்பல் ஈடுபட்டிருந்தபோது அதிகாரிகள் அதனை முறியடித்தனர். ஆள்மாறாட்ட மோசடியில் ஈடுபட்டதாக 11 பேரைக் காவல்துறை கைது செய்து விசாரித்து வருகிறது.
