ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சல்மர் பகுதியில் உள்ள மேகா கிராமத்தில், 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய உயிரினத்தின் புதைபடிவங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அது, ‘பைட்டோசார்’ என்று குறிப்பிடப்படும் மரப்பல்லி இனத்தைச் சேர்ந்த உயிரினமாக இருக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
முதலை போன்ற ஊர்வன வகையைச் சேர்ந்த இந்த உயிரினம், 210 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்துள்ளன என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர்.
இந்தியாவில் முதன்முறையாக நன்கு பாதுகாக்கப்பட்ட தொல்லுயிர் எச்சம் இதுவாகத்தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
மேகா கிராம மக்கள் அங்குள்ள ஏரிக்கு அருகே மணல் அள்ள, தோண்டிக் கொண்டிருந்தபோது, இரண்டு மீட்டர் நீளமுள்ள உயிரினத்தின் புதைபடிவத்தைக் கண்டதாகவும் உடனடியாக மாவட்ட நிர்வாகம், தொல்லியல் துறைக்குத் தகவல் தெரிவித்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.
அந்த உயிரினத்தின் புதைபடிவ முட்டை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
“இந்தக் கண்டுபிடிப்பு, பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில், இங்கு ஓர் நதி இருந்திருக்கலாம் என்பதையும் காட்டுகிறது. இந்தப் புதைபடிவம் மீன்களை உண்டு வாழ்ந்த ஒரு நடுத்தர அளவிலான பைட்டோசாராக இருக்கக்கூடும்.
“பைட்டோசார்கள் 229 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையவை என நம்பப்படுகிறது. அவை ஆரம்பகட்ட ஜுராசிக் காலத்தைச் சேர்ந்தவையாகவும் இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது,” என்று ஜோத்பூரில் உள்ள ஜெய் நரேன் வியாஸ் பல்கலைக்கழகத்தின் மூத்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் வி.எஸ். பரிஹார் தெரிவித்துள்ளார்.