தென்காசி: சிவகிரி அருகே வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளை, தனிப்படை போலிசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்த விளக்கேத்தி மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்த வயதான தம்பதிகளான ராமசாமி (72) - பாக்கியம் (63) இருவரும் பணம், நகைக்காக, ஏப்ரல் 28ஆம் தேதி இரவு கொலை செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து பத்தே முக்கால் பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
இந்தக் கொலை வழக்கு குற்றவாளிகளைக் கைது செய்ய 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய 4 குற்றவாளிகளை தனிப்படை போலிசார் மே 18, ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
இதுகுறித்து செந்தில்குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது, “சிவகிரியை அடுத்த மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்த ராமசாமி - பாக்கியம் தம்பதியினர் கொலை வழக்கு தொடர்பாக பழங்குற்றவாளிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதேபோல், கண்காணிப்பு கேமரா பதிவுகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
இதில் ஆச்சியப்பன் (48) மாதேஸ்வரன் (52), ரமேஷ் (54) ஆகிய மூவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ராமசாமி - பாக்கியம் தம்பதியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர்.
கடந்த மாதம் 28ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல், இரு சக்கர வாகனத்தில் மூவரும் ராமசாமியின் தோட்டத்துக்கு சென்றுள்ளனர். கரும்புக்காடு பகுதியில் வாகனத்தை நிறுத்தி விட்டு, வீட்டின் அருகே மறைந்து இருந்துள்ளனர்.
அப்போது மின் தடை ஏற்படுத்தி, பாக்கியத்தை வீட்டில் இருந்து வெளியே வர வைத்துள்ளனர். வெளியே வந்த அவரை, மரக்கட்டையால் தாக்கி கொன்றுள்ளனர். சத்தம் கேட்டு வந்த ராமசாமியையும் மூவரும் கட்டையால் தாக்கி கொன்றுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
பாக்கியம் அணிந்திருந்த பத்தே முக்கால் பவுன் நகையை பறித்துக் கொண்டு மூவரும் தப்பிவிட்டனர். திருடிய நகையை சென்னிமலை பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரிடம் கொடுத்து உருக்கியுள்ளனர். உருக்கப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரனும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றவாளி ஆச்சியப்பன் தனியாக இருக்கும் வயதானவர்களை நோட்டமிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அவர் கொடுக்கும் தகவலின் படி, மற்ற இருவரும் இணைந்து, தனியாக வசிக்கும் வயதானவர்களைக் கொலை செய்து நகையைத் திருடியுள்ளனர்.
பல்லடம் கொலை திருப்பூர் மாவட்டம், அவிநாசிபாளையம், சேமலைக்கவுண்டன்பாளையத்தில் வசித்துவந்த தெய்வசிகாமணி (78), அவரது மனைவி அலமாத்தாள் (74) மற்றும் அவர்களது மகன் செந்தில்குமார் (44) ஆகியோர் கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி கொலை செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஐந்தரை பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொலை வழக்கிலும் தற்போது பிடிபட்ட குற்றவாளிகள் மூவருக்கும் தொடர்புள்ளது.
இதுபோன்ற குற்றச் சம்பவம் மேலும் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு தீவிர பகல், இரவு சுற்றுக்காவல், 35 இருசக்கர வாகனச் சுற்றுக்காவல், 3 நான்கு சக்கர வாகனச் சுற்றுக்காவல் மற்றும் கீழ்பவானி பாசன வாய்க்கால் கரையோர பகுதிகளில் ஆயுதம் தாங்கிய 21 சுற்றுக்காவல் குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது,” என்றார்
சிக்கியது எப்படி?
கொலையாளிகளைப் பிடிக்க கண்காணிப்பு கேமரா பதிவுகள் உதவியாக இருந்துள்ளது. கொலை நடந்த பகுதியில் இருந்து இரவில் ஓர் இருசக்கர வாகனம் சென்றதைக் கண்டறிந்த போலிசார், அந்த வாகனம் எதுவரை சென்றது என்பதை உறுதிப்படுத்தி, கொலை குற்றவாளிகள் சிக்கியதாக தனிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

