தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீ விபத்தில் கணவன், மனைவி, இரு பிள்ளைகள் மரணம்

2 mins read
eefc1f1f-781a-4f27-9ec7-fd4970522a17
இரண்டாவது மாடியில் வசித்ததால் தப்பிக்க இயலாமல் நால்வரும் உயிரிழந்ததாக காவல்துறை கூறியது. - படம்: இந்திய ஊடகம்

தேவாஸ்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மாண்டனர்.

தேவாஸ் மாவட்டத்தில் உள்ள நாராயணப்பூரிலுள்ள ஒரு குடியிருப்புக் கட்டடத்தின் தரைத் தளத்தில் இயங்கிவந்த பால் கடையில் அதிகாலை 4.45 மணியளவில் தீவிபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் கூறினர்.

மளமளவென பற்றி எரிந்த தீ, தொடர்ந்து இரண்டாவது தளத்தில் வசித்து வந்த அந்தக் கடையின் உரிமையாளரின் வீடு வரை பரவியது.

அந்த வீட்டில் வசித்து வந்த தினேஷ் கார்பெண்டர் (வயது 35), அவரது மனைவி காயத்ரி (30), மகள் இஷிகா (10), மகன் சிராக் (7) ஆகிய நால்வரும் தீக்காயங்களினாலும் மூச்சுத்திணறியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

மத்தியப் பிரதேச மாநில காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “தரைத் தளத்தில் உள்ள கடையில் உண்டான தீ, முதல் தளம் காலியாக உள்ள நிலையில் இரண்டாம் தளம் வரையில் பரவியது.

“அங்கு தீ பற்றக்கூடிய பொருள்கள் ஏதேனும் சேகரித்து வைக்கப்பட்டிருந்ததா என்ற சந்தேகத்துடன் விசாரணை நடைபெற்று வருகிறது,” என்றார்.

பலியான குடும்பத்தினர் இரண்டாவது தளத்தில் வசித்ததினால் அவர்களால் தப்பிக்க முடியவில்லை எனவும் அவர் கூறினார்.

தீக்கான உண்மையான காரணம் இன்னும் தெரியாத நிலையில், பால் கடையில் ஏற்பட்ட மின்சாரக் கசிவு காரணமாக இருக்கக்கூடுமோ என்று சந்தேகிக்கப்படுவதாகவும் தடயவியல் அதிகாரிகள் தடயங்களைச் சேகரித்து வருவதாகவும் அதிகாரி கூறினார்.

கடந்த பிப்ரவரியில் ஹர்தா மாவட்ட பட்டாசுத் தொழிற்சாலை ஒன்றில் தீப்பற்றியதில் 11 பேர் உயிரிழந்தனர், 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

குறிப்புச் சொற்கள்