நான்கு அனைத்துலக விமான நிலையங்கள்: டெல்லி, மும்பையை விஞ்சிய கேரளா

நான்கு அனைத்துலக விமான நிலையங்கள்: டெல்லி, மும்பையை விஞ்சிய கேரளா

2 mins read
55ee99c4-500a-4449-8238-e0c73d33246f
திருவனந்தபுரம் விமான நிலையம். - படம்: இந்து தமிழ் திசை

திருவனந்தபுரம்: இந்தியாவின் உலகளாவிய விமானப் போக்குவரத்து மையமாக இருப்பது மும்பை அல்லது பெங்களூரு நகரம் எனக் கருதுகிறீர்கள் எனில் உங்களுடைய கணிப்பு தவறு.

இன்றைய நிலவரப்படி, இந்த நகரங்களை விஞ்சி அந்தப் பெருமைமிக்க இடத்தைப் பிடித்திருப்பது கேரள மாநிலம்.

தென்னிந்தியாவின் பல்வேறு முக்கியமான பகுதிகளை உலகெங்கிலும் உள்ள பல்வேறு இடங்களுடன் இணைக்கும் முக்கியப் பாலங்களாக இம்மாநிலத்தில் உள்ள நான்கு அனைத்துலக விமான நிலையங்கள் உருவெடுத்துள்ளன.

நாட்டின் வேறு எந்த மாநிலத்திலும் நான்கு அனைத்துலக விமான நிலையங்கள் இல்லை. கேரளாவில் திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய நான்கு அனைத்துலக விமான நிலையங்கள் இருப்பதால் இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் கேரள மாநிலம் முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

கேரளாவின் வளர்ச்சிக்கு சுற்றுலாத்துறை முக்கியப் பங்களிக்கிறது. மேலும், உலகம் முழுவதும் பரவியுள்ள கேரள சமூகத்தின் பங்களிப்பும் அளப்பறியது.

கடந்த 1932ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கேரளாவின் முதல் விமான நிலையம் திருவனந்தபுரத்தில் உள்ளது. இந்தியாவின் தெற்கு முனைக்கான நுழைவாயிலாக இந்த விமான நிலையம் கருதப்படுகிறது.

ஏறக்குறைய 650 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த விமான நிலையம், புகழ்பெற்ற பத்மநாப சுவாமி கோவிலில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

கடந்த 2024-25ஆம் ஆண்டில் 33,316 விமானங்கள் இங்கிருந்து இயக்கப்பட்டன 4.9 மில்லியன் பயணிகள் இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

கொச்சி அனைத்துலக விமான நிலையம் மிகப் பரபரப்பாக இயங்கக்கூடியது. முழுமையாக சூரிய சக்தியில் இயங்கும் விமான நிலையம் இது. கடந்த 1994ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்த விமான நிலையத்தை ஆண்டுதோறும் ஏறக்குறைய 1.12 கோடி பயணிகள் பயன்படுத்துகின்றனர்.

கடந்த ஆண்டு 50 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்நாட்டுப் பயணிகள், 52 லட்சம் அனைத்துலகப் பயணிகள் இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தி உள்ளனர்.

கண்ணூர் விமான நிலையம் கடந்த 2018ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. கேரளாவின் வடக்கு மாவட்டங்களுக்கான விமானச் சேவையை வழங்குவதில் முக்கியப் பங்காற்றி வரும் இந்த விமான நிலையம் 2,300 பரப்பளவில் அமைந்துள்ளது.

இந்தியாவில் மேசை ஓடுபாதை கொண்ட சில விமான நிலையங்களில் கோழிக்கோடு அனைத்துலக விமான நிலையமும் ஒன்றாகும். இரண்டு முனையங்களைக் கொண்டுள்ள இந்த விமான நிலையத்தின் அனைத்துலக முனையம் ஏறக்குறைய 18,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது. உள்நாட்டு முனையம் 5,500 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது.

குறிப்புச் சொற்கள்