திருவனந்தபுரம்: சபரிமலையில் இருந்து நான்கு கிலோ தங்கம் மாயமானது குறித்து விசாரணை நடத்த கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, இவ்வழக்கைக் கையில் எடுத்துள்ள கேரள லஞ்ச ஒழிப்புத் துறை, அதன் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற, கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.
அக்கோவிலில் உள்ள ஐயப்பன் சன்னிதிக்கு முன்பாக வீற்றிருக்கும் துவாரபாலகர்கள் சிலைகளுக்கு, கடந்த 1999ஆம் ஆண்டு தங்கக் கவசங்கள் சார்த்தப்பட்டன.
இத்தங்கக் கவசங்கள் 40 ஆண்டுகள் வரை அப்படியே இருக்கும் எனக் கூறப்பட்ட நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு அவற்றின் எடை திடீரென குறைந்திருப்பது தெரியவந்தது.
கவசங்களில் சிறு பழுதுகள் ஏற்பட்டதால், அவற்றைச் சரிசெய்ய சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு எடையிட்டுப் பார்த்தபோது, அவற்றின் எடை குறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், துவாரபாலகர் சிலையில் இருந்து, நீதிமன்றத்தின் அனுமதியின்றி தங்கக் கவசங்கள் ஏன் அகற்றப்பட்டன என்று ஒருதரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனால் சென்னையில் இருந்து அக்கவசங்களை மீண்டும் கேரளா கொண்டு வருமாறு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அப்போது நடத்தப்பட்ட சோதனையில்தான், தங்கக் கவசங்களின் எடை குறைந்திருப்பது தெரியவந்தது.
தொடர்புடைய செய்திகள்
தற்போது இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த, சபரிமலை கோவில், லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.