சமணத் துறவறம் ஏற்கும் கோடீஸ்வரக் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர்

சமணத் துறவறம் ஏற்கும் கோடீஸ்வரக் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர்

படம்: இந்து தமிழ் திசை

20 Nov 2026 - 6:55 pm

2 mins read

சூரத்: ஆண்டுதோறும் ரூ.15 கோடி வருவாய் ஈட்டும் வளமான ஜவுளித் தொழிலை விடுத்து, குஜராத் மாநிலம் சூரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சமணத் துறவறம் (தீட்சை) ஏற்க முடிவுசெய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்திலுள்ள ஜஸ்வந்த்கர் கிராமத்தைச் சேர்ந்தவர் திலீப் பாய் போகர் (47).

இளம் வயதில் பிழைப்புக்காகச் சூரத்துக்குக் குடிபெயர்ந்த இவர், சிறிய ஜவுளிக்கடையுடன் தனது பயணத்தைத் தொடங்கினார்.

கடின உழைப்பால் மூன்று கடைகள், பல இயந்திரங்களுடன் ஆண்டுக்கு ஏறக்குறைய ரூ.15 கோடி வருமானம் ஈட்டும் நிலைக்கு இன்று தனது வணிகத்தை உயர்த்தியுள்ளார்.

சமண ஆச்சாரியார் ஒருவருடனான சந்திப்பு, திரு திலீப் பாய்க்குச் சமண சமயத்தின் மீது ஆழமான ஈர்ப்பை உருவாக்கியது. இது அவரது மனைவி, மூன்று மகள்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

2023ஆம் ஆண்டில் மூத்த மகள் ஷைலி துறவறம் ஏற்று ‘சாத்வி தர்ஷிதா’ என்ற பெயரைப் பெற்றார். அதையடுத்து திரு திலீப் பாய் தனது தொழிலிலிருந்து விலகத் தொடங்கினார். அவருடன் மனைவி ஜோதி பென் (45), இளைய மகள்களான சவி (22), சார்வி (14) ஆகியோரும் துறவறப் பாதையைத் தேர்ந்தெடுத்தனர்.

இதற்காகப் பட்டப்படிப்பைக் கைவிட்டார் சவி. மாவட்ட அளவிலான கால்பந்து வீராங்கனையான சார்வி, 9ஆம் வகுப்புப் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தினார்.

தற்போது நால்வரும் சமணத் துறவிகளுடன் தங்கி, வெறுங்காலுடன் நடப்பது, கடுமையான உணவுக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட துறவறப் பயிற்சிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

அனைத்து நடைமுறைகளும் முடிந்த பிறகு, 2027ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி சூரத்தில் நடைபெறும் விழாவில் இவர்கள் முறைப்படி துறவறம் ஏற்க உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்