பீகார் மாநிலத்தில் பட்டாணி திருடியதாக 4 சிறார்களைச் சித்ரவதை செய்த சம்பவம்குறித்த காணொளி வெளியாகிச் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பீகாரின் முங்கர் வட்டாரத்தில் உள்ள ஜோவாபஹியர் கிராமத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நான்கு சிறார்கள் 25 கிலோ பட்டாணி திருடியதாகக் குற்றம் சாட்டிய அக்கிராமத்தினர் அவர்களைக் கயிறுகளால் கட்டி, அடித்து ஊர்வலமாக இழுத்து சென்றுள்ளனர்.
சனிக்கிழமை நிகழ்ந்த இந்தச் சம்பவத்தைக் காட்டும் சுமார் 20 வினாடி காணொளிப் பதிவு சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து இவ்விவகாரம் மக்கள் மத்தியில் சீற்றத்தைத் தூண்டியுள்ளது.
பகிரப்பட்டுள்ள காணொளியில் சிறார்கள், வாடிய முகத்துடன் கண்ணீர் சிந்தியபடி, கைகள் கட்டப்பட்ட நிலையில், கிராமம் நெடுக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
சிறார்கள்மீது குற்றம் சுமத்தி மேற்கூறிய வகையில் தண்டனையளித்தபோதும் அவர்களின் குடும்பத்தினரோ, அல்லது உறவினர்களோ இதில் தலையிடவில்லை என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் கண்முன்னே அந்தச் சிறார்கள் அடிக்கப்பட்ட கொடூரத்தை கண்ட கிராமவாசிகளும் இதைத் தட்டிக்கேட்கவில்லை என்றும் செய்தியறிக்கைகள் கூறின.
இதற்கிடையே, இந்தச் சம்பவத்திற்கு ஆதரவாகச் சில உள்ளூர் கடைக்காரர்களும் குடியிருப்பாளர்களும் குரல் கொடுத்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
திருட்டை தடுக்கும் நோக்கத்திலும், சீர்திருத்தும் இலக்குடனும் இந்த ஊர்வலம் நடத்தப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளது பொதுமக்களின் சினத்தை மேலும் அதிகரித்துள்ளது. சம்பவம்குறித்த விசாரணை தொடர்கிறது.


