புதுடெல்லி: இந்திய மாநிலங்களவையில் காலியாக உள்ள உறுப்பினர் பதவிகளுக்குப் புதிதாக நான்கு பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பை அதிபர் திரௌபதி முர்மு வெளியிட்டார்.
இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் மொத்தம் 245 உறுப்பினர் இடங்கள் உள்ளன. 233 பேர் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மீதியுள்ள 12 பேர் அதிபரால் நியமிக்கப்படுவர்.
இந்த ஏற்பாட்டின் மூலம் கலை, இலக்கியம், விளையாட்டு, தொழில்துறை ஆகியவற்றில் சிறந்து விளங்குபவர்களையும் சமூக சேவையாளர்கள், செய்தியாளர்கள் எனப் பலதரப்பட்ட ஆளுமைகளையும் நியமன எம்பி பதவிக்கு மத்திய அரசு பரிந்துரை செய்வது வழக்கம். அதனை ஏற்று அதிபர், ஒப்புதல் வழங்கி அறிவிப்பார்.
அந்த வகையில், இம்முறை நான்கு பேர் நியமன உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மும்பை பயங்கரவாத தாக்குதல் வழக்கை அரசு தரப்பில் முன் நின்று நடத்திய வழக்கறிஞர் உஜ்வல் நிகம், கேரளாவைச் சேர்ந்த கல்வியாளர் சதானந்தன் மாஸ்டர், முன்னாள் இந்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்ளா, வரலாற்று ஆய்வாளர் மீனாட்சி ஜெயின் ஆகிய நால்வரும் அதிபரால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் விரைவில் மாநிலங்களவைத் தலைவர் பொறுப்பு வகிக்கும் துணை அதிபர் முன்னிலையில் எம்பியாக பதவியேற்பர்.