புதுடெல்லியில் கட்டடம் இடிந்துவிழுந்து நால்வர் உயிரிழப்பு

புதுடெல்லியில் கட்டடம் இடிந்துவிழுந்து நால்வர் உயிரிழப்பு

2 mins read
7050d83c-717d-4f7b-8e50-41dee0469923
சாகெட் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் இடிந்துவிழுந்த கட்டடத்தின் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளனர். - படம்: என்டிடிவி

புதுடெல்லி: டெல்லியின் தெற்குப் பகுதியில் உள்ள சாகெட் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள ஐந்து மாடிக் கட்டடம் இடிந்துவிழுந்ததில் நால்வர் மாண்டனர்.

கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளோரைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இதுவரை 10க்கும் அதிகமானோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இடிந்துவிழுந்த கட்டடத்தில் துணைப்பாட நிலையங்கள், உணவு, பானக் கடை, அலுவலகங்கள் ஆகியவை இருந்தன. சம்பவத்தின்போது கட்டடத்தின் மேல் தளத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

டெல்லி முதல்வர் ரேகா குப்தா, சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார்.

“மீட்புப் பணிகள் இரவு முழுவதும் நடைபெற்றன. முதல்வரின் உத்தரவின்படி துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சம்பவம் தொடர்பில் புகார் ஒன்றும் மெரௌலி காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதுதொடர்பில் வழக்கு விசாரணையும் மேற்கொள்ளப்படும்,” என்று முதல்வர் அலுவலகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டது.

இடிந்துவிழுந்த கட்டடத்தின் சுற்றுவட்டாரத்தில் உள்ள கட்டடங்களிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அபாயகரமான நிலையில் உள்ள கட்டடங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்டோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்படி முதல்வர் ரேகா உத்தரவிட்டார். அத்துடன் கட்டடம் எழுப்பப்படுவதற்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள்மீதும் சம்பந்தப்பட்ட துறைகள்மீதும் கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் அவர் கூறினார்.

இடிந்துவிழுந்த கட்டடத்தின் உரிமையாளர்மீது கொலை குற்றம் பதிவுசெய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உரிமையாளரைக் கைதுசெய்ய சோதனைகளையும் மேற்கொண்டுள்ளதை அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளோர் உதவிக்காகக் கூக்குரலிட்டதைக் கேட்க முடிந்ததாகச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

ஒட்டுமொத்த கட்டடமும் ஒரு நொடியில் இடிந்துவிழுந்ததைப் பார்த்ததாகவும் அருகில் உள்ளோர் அலறியபடி ஓடியதாகவும் மற்றொரு நபர் குறிப்பிட்டார்.

கட்டடத்தில் ஏறக்குறைய 200லிருந்து 300 ஊழியர்கள்வரை வழக்கமாக வேலை செய்வர் என்று உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்