லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் திங்கட்கிழமை அதிகாலை நிகழ்ந்த விபத்தில் ஐவர் மாண்டனர்; நால்வர் காயமடைந்தனர்.
ஹர்தோய் மாவட்டத்தில் மல்லவான் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அந்த விபத்து அதிகாலை மூன்று மணியளவில் நிகழ்ந்ததாகக் காவல்துறை கூறியது.
திருமண நிகழ்ச்சிக்குச் சென்றுவிட்டுத் திரும்பிய கார் ஒன்று சாலை சந்திப்பில் நின்றுகொண்டிருந்த தனியார் பேருந்து மீது மோதியது.
அதனால் காரின் முன்பகுதி நொறுங்கியது. பேருந்தில் திருமண விழாவைச் சேர்ந்தவர்களும் இருந்தனர்.
தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
ஐவர் உயிரிழந்தனர். அவர்களில் நால்வர் பெண்கள்.
காயமடைந்த நால்வர் லக்னோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
பேருந்திலிருந்த எல்லாப் பயணிகளுக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டதாகக் கூடுதல் காவல்துறைக் கண்காணிப்பாளர் நிரிபேந்திர குமார் தெரிவித்தார்.
முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு முறையான மருத்துவச் சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யுமாறு மாவட்ட அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
விபத்து குறித்து விசாரணை நடைபெறுகிறது.