பாட்னா: பீகார் மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜுகுமார் சிங்குக்கு டெல்லி நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி இரவு டெல்லியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் புத்தாண்டுக் கொண்டாட்டம் நடைபெற்றது.
அந்த நிகழ்வில் பீகார் மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜுகுமார் சிங், 56, கலந்துகொண்டார். அப்போது கொண்டாட்டத்தின் ஓர் அங்கமாக, வானை நோக்கிச் சிலர் துப்பாக்கிகளால் சுட்டனர். அதில் அர்ச்சனா குப்தா என்ற பெண்மீது தவறுதலாகக் குண்டு பாய்ந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விசாரணையின்போது அந்தப் பெண்ணைத் துப்பாக்கியால் சுட்டது சட்டமன்ற உறுப்பினர் ராஜுகுமார் சிங்தான் என்பது உறுதியானது. அவர்மீது கொலைக் குற்றமாகா மரணம் விளைவித்தல், ஆயுதச் சட்டங்களின்கீழ் வழக்குப் பதிவானது.
இந்த வழக்கை டெல்லி சிறப்பு நீதிமன்றம் விசாரித்துவந்த நிலையில், ராஜுகுமார் சிங்கிற்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தாருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி விஷால் கோக்னே உத்தரவிட்டார்.
கொண்டாட்டங்களின்போது நடைபெறும் துப்பாக்கிச் சுடுதல், பல உயிர்களைப் பறிக்கும் சாபக்கேடாக மாறிவிட்டது என்று வழக்கு விசாரணையின்போது நீதிபதி விஷால் கடுமையாக விமர்சித்திருந்தார்.

