கனடாவில் உள்ள இந்திய மாணவருக்கு அமெரிக்காவில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை

கனடாவில் உள்ள இந்திய மாணவருக்கு அமெரிக்காவில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை

படம்: ஏஎன்ஐ

31 Jul 2026 - 8:03 pm

2 mins read

சண்டிகர்: மூத்த அமெரிக்கக் குடிமக்களைக் குறிவைத்து பல மில்லியன் டாலர் மோசடித் திட்டத்தில் ஈடுபட்டதற்காக, மாணவர் விசாவில் கனடா சென்று படித்து வந்த 22 வயது இந்திய மாணவருக்கு அமெரிக்காவில் 48 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

விஸ்கான்சின் கிழக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், பணமோசடி செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றத்திற்காக 22 வயதான ரோஷன் ஷாவுக்கு அமெரிக்க மாவட்ட நீதிபதி பிரெட் லுட்விக் ஜூலை 27ஆம் தேதி 48 மாத சிறைத்தண்டனை விதித்ததாகக் கூறப்பட்டிருந்தது.

நீதிமன்றப் பதிவுகளின்படி, ஷா ஓர் இந்தியக் குடிமகன். அவர் மாணவர் விசாவில் கனடாவில் கல்லூரியில் படித்து வந்தார். மோசடி மூலம் கிடைத்த பணத்தைப் பெறுவதற்காக அவர் வருகையாளர் விசாவில் அமெரிக்காவிற்குள் நுழைந்தார்.

ஷா ஒரு மோசடிக் கட்டமைப்பின் அங்கமாக இருந்தார். அந்தக் கட்டமைப்பு, பாதிக்கப்பட்டவர்கள் நிதி மோசடிகளுக்கு இலக்காகிவிட்டனர் என்றும் வாஷிங்டனில் உள்ள ஒரு பாதுகாப்புப் பெட்டகத்தில் வைப்பதற்காகத் தங்கள் தங்கத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் நம்பவைத்து, அவர்களை ஏமாற்றியது. அவ்வாறு செய்யத் தவறினால், தங்கள் பணம் முழுவதையும் இழக்க நேரிடும் என்று பாதிக்கப்பட்டவர்களிடம் பொய்யுரைக்கப்பட்டது.

“இந்தியாவில் உள்ள தனது சக மோசடிக்காரர்கள், பாதிக்கப்பட்டவர்களைத் தொலைபேசியில் அழைத்து, குற்றங்களைச் செய்ய அவர்களின் அடையாளங்கள் பயன்படுத்தப்பட்டதாக நம்ப வைத்தனர். ஷாவாக ஆள்மாறாட்டம் செய்த மத்திய அரசாங்க முகவரிடம், பாதுகாப்பிற்காகப் பணம் அல்லது தங்கத்தை ஒப்படைக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் நம்ப வைக்கப்பட்டனர்,” என்று அந்த அறிக்கை கூறியது.

மேலும், அமெரிக்காவின் பல மாநிலங்களில் உள்ள 15 பேரிடமிருந்து ஷா 3.7 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக வசூலித்துள்ளார் என்றும் அது மேலும் கூறியது.

2025ல் விஸ்கான்சினில் உள்ள நியூ பெர்லினில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து தங்கம் வசூலிக்க முயன்றபோது, ​​ஷா கைது செய்யப்பட்டார். ஷா எந்த கனடிய மாநிலத்தில் படித்து வந்தார் அல்லது அவர் பயின்ற கல்வி நிறுவனம் எது என்ற விவரம் வெளியிடப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்
மாணவர் விசாவருகையாளர்சதித்திட்டம்