வன்போலிக் காணொளி மூலம் வங்கியில் கடன் பெற்று மோசடி; நால்வர் கைது

வன்போலிக் காணொளி மூலம் வங்கியில் கடன் பெற்று மோசடி; நால்வர் கைது

2 mins read
b066716d-65d2-4c70-90ba-7c055aa10e46
அகமதாபாத் இணையக் குற்றப் பிரிவுக் காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட மோசடிப் பேர்வழிகள். - படம்: இந்து தமிழ்திசை

அகமதாபாத்: வன்போலிக் காணொளி மூலம் வங்கியில் கடன் பெற்று மோசடி செய்ததாக நால்வரை இந்தியாவின் குஜராத் மாநிலம், அகமதாபாத் இணையக் குற்றப்பிரிவுக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

வழக்கமாக இணையவழி மோசடியில் ஈடுபடுவோர், ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய கடவுச்சொல் என அழைக்கப்படும் ‘ஓடிபி’ எண்ணைப் பயன்படுத்தி ஏமாற்றுவதுண்டு. அதனால், அந்த எண்ணை யாரிடமும் பகிர வேண்டாம் எனக் காவல்துறையினரும் வங்கிகளும் பொதுமக்களுக்கு விழிப்பூட்டி வருகின்றனர்.

இந்நிலையில், அந்த எண்ணைப் பெற வன்போலிக் காணொளியைக் குஜராத்தைச் சேர்ந்த நால்வர் பயன்படுத்தினர்.

அகமதாபாத் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு அவர் கணக்கு வைத்துள்ள வங்கியிலிருந்து கடந்த சில நாள்களாக எந்தவித ‘ஓடிபி’யும் வரவில்லை. அதனால் சந்தேகம் அடைந்த அவர், காவல்துறையைத் தொடர்புகொண்டார்.

அதுதொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறை அதிகாரிகள், மோசடிப் பேர்வழிகளைக் கைதுசெய்தனர்.

அந்த மோசடியை அவர்கள் எப்படி அரங்கேற்றினர் என்பதை அதிகாரிகள் விவரித்தனர். சம்பந்தப்பட்ட தொழிலதிபரின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் மாற்றப்பட்டுள்ளதைக் காவல்துறை கண்டறிந்தது.

மாற்றப்பட்ட அந்தக் கைப்பேசி எண்ணைக் கொண்டு, அந்தத் தொழிலதிபரின் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி, ரூ.25,000 கடன் பெற்றனர். மேலும், அவரது வங்கி மின்னிலக்கக் கணக்கிலும் முக்கியத் தரவுகள் உள்ளதா என்பதை மோசடிக்காரர்கள் ஆராய்ந்தனர்.

அதற்காக, செயற்கை நுண்ணறிவைக் கொண்டு வன்போலிக் காணொளி ஒன்றை அவர்கள் உருவாக்கினர். அதன்மூலம் ஆதார் எண்ணை அங்கீகரிக்கும் முறையைச் சரிபார்த்து, அதில் கைப்பேசி எண்ணை மாற்றி, ‘ஓடிபி’யைப் பெற்றனர்.

அந்தக் குற்றம் தொடர்பாக கனுபாய் பார்மர், ஆஷிஷ் வலந்த், முகம்மது கைஃப் பட்டேல், தீப் குப்தா ஆகிய நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் பொதுச் சேவை மையத்தில் பணிபுரிந்தவர் எனக் காவல்துறை தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்