புதுடெல்லி: கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.
அதற்கான ஆதாரங்களைத் தனது கட்சி விரைவில் வெளியிடும் என்றும் இந்திய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் பேசியபோது அவர் தெரிவித்தார்.
‘ஆப்பரேஷன் சிந்தூர்’, இந்தியப் பொருளியல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ள கருத்துகள் இந்திய எதிர்க்கட்சிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக, ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆளும் பாஜக அரசை நாடாளுமன்றத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவின் தேர்தல் முறை என்பது ஏற்கெனவே இறந்துவிட்டதாக ராகுல் காந்தி கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த தேர்தலில் பாஜகவுக்கு குறுகிய பெரும்பான்மையைப் பெற்றுத்தரும் நோக்கத்துடன், மோசடி செய்யப்பட்டதாக அவர் சாடியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் சட்ட மாநாட்டில் பேசியபோது, கருத்துக் கணிப்புகளில் மோசடி செய்யப்பட்டதற்கான ஆதாரங்களை காங்கிரஸ் கட்சி விரைவில் வெளியிடும் என்றும் ஏறக்குறைய 80 நாடாளுமன்றத் தொகுதிகளில் பாஜகவுக்கு ஆதரவாக மோசடி நடந்துள்ளன என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
“இல்லையெனில், திரு மோடியால் பிரதமர் ஆகியிருக்க முடியாது. மோசடி நடப்பதை சில நாள்களில் நாங்கள் நிரூபிக்கப் போகிறோம்.
தொடர்புடைய செய்திகள்
“உண்மை என்னவென்றால், இந்தியாவில் தேர்தல் முறை ஏற்கெனவே இறந்துவிட்டது. தற்போதைய இந்தியப் பிரதமர் மிகக் குறைந்த பெரும்பான்மையுடன் அப்பதவியில் உள்ளார்,” என்றார் ராகுல்.
காங்கிரஸ் கட்சி வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடியபோது, தாம் மிரட்டப்பட்டதாக அவர் கூறினார்.
அண்மையில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, வாக்காளர் பட்டியலில் பேரளவில் மோசடி செய்யப்பட்டதற்கான ஆதாரங்களை காங்கிரஸ் கண்டுபிடித்திருப்பதாகத் தெரிவித்தார் ராகுல் காந்தி.
ஏற்கெனவே, இந்தியாவில் நடக்கும் தேர்தல்களில் வாக்குத்திருட்டு நடைபெறுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், இந்தியத் தேர்தல் முறை இறந்துவிட்டதாக ராகுல் காந்தி விமர்சித்திருப்பதற்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.