ஒரே வீட்டைப் பலருக்கு விற்று மோசடி; கணவன் - மனைவி கைது

ஒரே வீட்டைப் பலருக்கு விற்று மோசடி; கணவன் - மனைவி கைது

2 mins read
b526d6fd-85a4-422f-89d9-40b5ce6fc25e
வீட்டு விற்பனை மோசடி மூலம் ரூ.2 - 2.5 கோடி வசூலிக்கப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது. - மாதிரிப்படம்: பிக்சாபே
Google News Preferred Icon

புதுடெல்லி: ஒரே வீட்டைப் பலருக்கு விற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் கணவனையும் மனைவியையும் டெல்லி காவல்துறையினர் கிரேட்டர் நொய்டாவில் கைதுசெய்தனர்.

நரேஷ் குமார் சிக்ரி, 57 - சாரதா சிக்ரி, 55, என்ற அவ்விணையர் துவாரகா பகுதியில் வசித்து வருகின்றனர். நரேஷ் குமார் கடன் முகவராகப் பணியாற்றி வருகிறார்.

அவர்கள் தங்களுக்குச் சொந்தமான ஒரே வீட்டை விற்பனை செய்ய பலருடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, விற்பனை நடைமுறைகளை முடிக்காமல் அவர்களிடமிருந்து பணம் வசூலித்து மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த மோசடி தொடர்பாகக் கடந்த ஆண்டு இரு வழக்குகள் பதிவாகின. அவற்றில் சாரதா சிக்ரிக்கு எதிரான ஒரு வழக்கில், 2025 செப்டம்பரில் துவாரகா நீதிமன்றம் அவரைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.

முன்னதாக, அவர் தாக்கல் செய்த முன்பிணை மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதுபற்றி காவல்துறைத் துணை ஆணையர் அங்கித் சிங் கூறுகையில், “சந்தேகப் பேர்வழிகள் தங்கள் வீட்டை அடைமானம் வைத்திருந்தனர். வங்கி நிலுவைத் தொகையைச் செலுத்துவதற்காகப் பணம் திரட்டும் நோக்கில், அவர்கள் பலருடன் விற்பனை ஒப்பந்தங்களைச் செய்து பணம் வசூலிக்கத் தொடங்கினர்,” என்றார். இந்த மோசடி மூலம் அவர்கள் ரூ. 2-2.5 கோடி வசூலித்திருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது.

இந்நிலையில், கிரேட்டர் நொய்டாவில் பதுங்கியிருந்த சிக்ரி இணையரைக் காவல்துறை அதிகாரிகள் தேடிக் கண்டுபிடித்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, நீதிமன்றக் காவலில் வைத்தனர்.

இந்த மோசடியில் சிக்கியவர்கள் யார் யார், வசூலிக்கப்பட்ட தொகை போன்ற விவரங்களை அறிய, வங்கிப் பரிவர்த்தனைகளையும் புகார்களையும் காவல்துறையினர் விரிவாக ஆராய்ந்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்