கேரளாவில் பெண்களுக்கு இலவசப் பேருந்துச் சேவை

கேரளாவில் பெண்களுக்கு இலவசப் பேருந்துச் சேவை

படம்: இந்து தமிழ் திசை

15 Jun 2026 - 8:14 pm

2 mins read

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் பெண்களுக்கும் திருநங்கைகளுக்கும் இலவசப் பேருந்துச் சேவைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, இனிமேல் அவர்கள் மாநில அரசாங்கத்தின் பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணம் செய்யலாம்.

‘பிரியதர்ஷினி திட்டம்’ எனும் அதனை காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கம் திங்கட்கிழமை (ஜூன் 15) நடைமுறைக்குக் கொண்டுவந்தது.

கேரளச் சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது அரசாங்கப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்ற வாக்குறுதியை ஐக்கிய ஜனநாயக முன்னணிக் கூட்டணி அளித்திருந்தது. அதனை நிறைவேற்றும் வகையில், மாநில முதல்வர் வி.டி.சதீசன், திருவனந்தபுரம் தம்பானூர் பேருந்து நிலையத்தில் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

“பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணம் என்பது வெறும் சலுகையன்று. இது கேரளப் பெண்களுக்கு அரசாங்கம் அளிக்கும் மரியாதையின் அடையாளம். சமூகத்தில் பெண்களை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான செய்தியாகவும் இது அமைகிறது,” என்றார் அவர்.

பெண்களும் திருநங்கைகளும் ஏழு வகையான சாதாரணப் பேருந்துகளில் கட்டணமின்றிச் செல்லலாம். அந்தப் பேருந்துகளில் ‘சிறப்பு ஒட்டுவில்லைகள்’ ஒட்டப்பட்டிருக்கும். புதிய திட்டத்திற்காக ஆண்டுதோறும் ஏறக்குறைய 800 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

தனியார் பேருந்து நிறுவனங்களும் பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பின் அங்கமே என்று திரு சதீசன் கூறினார். அரசாங்கப் பேருந்துகள் இயங்காத பல பகுதிகளில் பொதுமக்கள் தனியார் பேருந்துகளையே நம்பியிருப்பதாக அவர் சொன்னார். தனியார் பேருந்து நிறுவனங்களின் பங்களிப்பை உறுதி செய்வதற்கான வழிமுறைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என்றும் கேரள முதல்வர் குறிப்பிட்டார்.

‘பிரியதர்‌ஷினி’ திட்டம் பெண்களின் அன்றாடப் பயணச் செலவைக் கிட்டத்தட்ட 15 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடு வரை குறைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டத்தால் மாநிலத்தின் தென்பகுதியில் வசிப்போர், குறிப்பாகத் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பெண்கள், அதிகப் பலனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருவனந்தபுரத்தில் மட்டும் ஏறக்குறைய 700 சாதாரணப் பேருந்துகள் இயங்குகின்றன. தென்மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக 1,268 சாதாரணப் பேருந்துகள் செயல்படுகின்றன.

அதனால் அங்கு வாழும் மக்கள், திட்டத்தின் மூலம் பேரளவில் பயனடைவார்கள் என்று நம்பப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
கேரளாஇலவசம்பேருந்துசேவைபெண்கள்திருநங்கை