ஆண்களுக்கும் இலவசப் பேருந்துப் பயணம்: போக்குவரத்துக் கழகங்கள் முடங்கும் எனத் தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

2 mins read
4a93fb59-f55c-4ee1-9a9f-fe248a8b8089
ஆண்களுக்கும் இலவசப் பேருந்துப் பயணம். - படம்: கல்கி. கோப்புப்படம்

சென்னை: அரசு நகரப் பேருந்துகளில் ஆண்களுக்கும் இலவசப் பயணம் என்ற அதிமுகவின் தேர்தல் வாக்குறுதி, அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிதிநிலையை மேலும் மோசமாக்கிவிடும் என்று தொழிற்சங்கங்கள் கவலை தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் ‘மகளிர் விடியல் பயணம்’ என்ற பெயரில், 2021ஆம் ஆண்டு முதல் அரசு நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்து வருகின்றனர்.

இச்சலுகையினால் அரசு போக்குவரத்துக் கழகங்களின் நிதிநிலை ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஓய்வுபெற்ற பணியாளர்களுக்குப் பணப்பலன்களை வழங்கக்கூட நிதியின்றித் தடுமாறும் அவலநிலை தற்போது நிலவுகிறது.

இந்நிலையில், அதிமுக தனது தேர்தல் அறிக்கையில், ‘அரசு நகரப் பேருந்துகளில் ஆண்களுக்கும் இலவசப் பயணம்,’ என்று வாக்குறுதி அளித்துள்ளது.

இந்த அறிவிப்பு அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள், ஊழியர்கள், தொழிற்சங்கத்தினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்தினால், அரசு போக்குவரத்துக் கழகங்களை இழுத்து மூடவேண்டிய நிலைதான் ஏற்படும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிஐடியு) சங்கப் பொதுச்செயலாளர் ஆறுமுக நயினார் கூறுகையில், “தமிழகத்தில் அரசுப் பேருந்தை ஒரு கிலோமீட்டர் தூரம் இயக்க 70 ரூபாய் செலவாகிறது. ஆனால், அதன் மூலம் கிடைக்கும் வருவாயோ 30 ரூபாய் மட்டுமே. சுமார் பத்தாயிரம் பேருந்துகள் வருமானம் குறைந்த வழித்தடங்களில்தான் இயக்கப்படுகின்றன.

“பொதுப்போக்குவரத்து வசதியைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் எந்த அரசாக இருந்தாலும் ஆண்டுதோறும் நிதிநிலை அறிக்கையில் சிறப்பு நிதி ஒதுக்கக்கோரிப் போராடி வருகிறோம்; ஆனால் அரசு ஒதுக்குவதில்லை.

“அதிமுகவின் இந்த அறிவிப்பு பொதுப்போக்குவரத்தை ஊக்குவிப்பதாக இல்லை. இது தேர்தல் நேரத்தில் வெளியிடும் வெற்று அறிவிப்பாகவே பார்க்கப்படுகிறது. ஆண்களுக்கும் இலவசம் என்பதைச் செயல்படுத்தினால், போக்குவரத்துக் கழகங்களின் நிதிநிலை இன்னும் மோசமாகிவிடும்,” என்றார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (ஏஐடியுசி) சங்கப் பொதுச்செயலாளர் ஆறுமுகம், “பெண்களுக்கு இலவசப் பயணம் என்று தற்போதைய அரசு அறிவித்துள்ளது. ஆனால், இதற்கான முழு நிதியை மாநில அரசு வழங்குவதில்லை. 70 விழுக்காட்டுத் தொகையை மட்டுமே தமிழக அரசு வழங்குகிறது. மீதமுள்ள 30 விழுக்காட்டுத் தொகையைப் போக்குவரத்துக் கழகங்கள்தான் ஈடுசெய்கின்றன.

எரிபொருள், பேருந்து பராமரிப்பு, உதிரி பாகங்கள், சுங்கக் கட்டணம் எனப் பேருந்துகளின் இயக்கச் செலவுகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், நகரப் பேருந்துகளில் ஆண்களுக்கும் இலவசப் பயணத் திட்டத்தைச் செயல்படுத்தினால் அரசு போக்குவரத்துக் கழகங்கள் அழிவுப் பாதைக்குச் சென்றுவிடும்,” என்று தொழிற்சங்க நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்