பெங்களூரு: கடும் நிதி நெருக்கடி காரணமாக, பெங்களூரு பெருநகரப் போக்குவரத்துக் கழக (பிஎம்டிசி) ஊழியர்களுக்கு இந்த மாதம் ஊதியம் வழங்கப்பட மாட்டாது எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் மேற்கொள்ள பெங்களூரில் ‘சக்தி திட்டம்’ செயல்பாட்டில் இருப்பது முக்கியக் காரணம் என கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (கேஎஸ்ஆர்டிசி) ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், பல்வேறு நிலுவைத் தொகைகள் காரணமாக, பிஎம்டிசி நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டமான சக்தி திட்டத்தின்கீழ், அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை இன்னும் செலுத்தவில்லை என்றும் இதனால் போக்குவரத்துக் கழகங்களின் நிதி நிலைமை பெருமளவு சீர்குலைந்துள்ளது என்றும் கேஎஸ்ஆர்டிசி சங்கத் தலைவர் ஜெகதீஷ் ஹெச்.ஆர் தெரிவித்துள்ளார்.
ஊழியர்களின் காப்பீடு, வருங்கால வைப்பு நிதிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணமும் வேறு தேவைகளுக்குத் திருப்பப்பட்டுள்ளதாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான பணிக்கொடை 2023ஆம் ஆண்டு முதலே நிலுவையில் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரூ.650 கோடி டீசல் பாக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் திரு ஜெகதீஷ் சாடினார்.
அரசு உடனடியாகத் தலையிட்டுத் தேவையான நிதி உதவியைச் செய்யாவிட்டால், தலைநகரின் பொதுப் போக்குவரத்துச் சேவை மேலும் முடங்கும் அபாயம் உருவெடுத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
எனினும், இந்தக் குற்றச்சாட்டுகளை பிஎம்டிசி நிர்வாக இயக்குநர் ரகுநந்தன் மூர்த்தி மறுத்துள்ளார்.
ஊழியர்களுக்கு வழக்கம்போல் இந்த மாதச் சம்பளம் எவ்விதத் தடங்கலுமின்றி வழங்கப்படும் என்றும் யாரும் கவலைகொள்ளத் தேவையில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
