சென்னை: தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தத்தம் இருப்பிடங்களிலிருந்து கல்வி நிலையங்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றிப் பயணம் மேற்கொள்ளலாம் எனத் தமிழகப் போக்குவரத்து அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
ஜூன் 4ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு அம்மாநில அரசு மே 29ஆம் தேதி இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்டது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், 2026-27ஆம் கல்வியாண்டிற்கான மாணவர், மாணவியருக்கான பேருந்தில் கட்டணமின்றிப் பயணம் மேற்கொள்வதற்கான புதிய பயண அட்டைகள், அவர்கள் பயிலும் பள்ளி, கல்லூரிகளிலேயே வழங்குவதற்குத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் வாயிலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அதற்கான கால அளவினைக் கருத்தில் கொண்டு, புதிய பயண அட்டை கிடைக்கும் வரை பள்ளி மாணவர், மாணவியர் சீருடை அணிந்து, எவ்வித இடையூறுமின்றி, அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவர்கள், தங்களது கல்வி நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டையை நடத்துநரிடம் காண்பித்துப் பேருந்துகளில் இலவசமாகச் செல்லலாம் என்றும் பேருந்துகள் துல்லியமாக இயங்குவதைக் கண்காணிப்பதற்காகப் போக்குவரத்துக் கழகப் பொறுப்பதிகாரிகள் அடங்கிய குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

