டெல்லியில் திருநங்கைகளுக்கு இலவசப் பேருந்துப் பயணம்

டெல்லியில் திருநங்கைகளுக்கு இலவசப் பேருந்துப் பயணம்

1 mins read
5c00e1ad-4329-459c-b9f4-0ce65fa8edc8
’பிங்க் சஹேலி’ எனப்படும் அட்டையை அதிபர் திரௌபதி முர்மு டெல்லியில் அறிமுகப்படுத்தியிருந்தார்.  - கோப்புப்படம்: இந்துஸ்தான் டைம்ஸ்

புதுடெல்லி: பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டம் திருநங்கைளுக்கும் பொருந்தும் என டெல்லி முதல்வர் ரேகா குப்தா கூறியுள்ளார். இதற்கான முடிவு அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

மற்ற மாநில அரசுகளைப் போன்று டெல்லி அரசும் பெண்களுக்கு எனப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் பெண்களுக்கான இலவசப் பேருந்துப் பயணத் திட்டம் ஏற்கெனவே அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், அத்திட்டத்தின்கீழ் திருநங்கைகள் இலவசமாகப் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், இத்திட்டம் சமூக ஒருங்கிணைவு, கண்ணியம், சம உரிமை ஆகியவை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற டெல்லி அரசின் முயற்சியை பிரதிபலிக்கிறது என்றும் இதன் மூலம், திருநங்கைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் நகரத்தின் எந்த மூலைக்கும் நிதித் தடைகள் இல்லாமல் சென்று வரமுடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குடிமக்களும் மரியாதையுடன் தங்களுக்கான வாய்ப்புகள், சேவைகளை அணுகக்கூடிய விதத்தில், அனைவரையும் உள்ளடக்கிய, சமமான டெல்லியை உருவாக்குவதில் மாநில அரசு உறுதியாக உள்ளதாக முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பிங்க் சஹேலி’ எனப்படும் அட்டையை இம்மாதத் தொடக்கத்தில் அதிபர் திரௌபதி முர்மு டெல்லியில் அறிமுகப்படுத்தியிருந்தார். இந்த அட்டையைப் பயன்படுத்தி டெல்லியில் பெண்கள் இலவசப் பேருந்துப் பயணம் மேற்கொள்ள இயலும் என்றும் மெட்ரோ ரயில் போன்ற சேவைகளைக் கட்டணம் மூலம் பயன்படுத்த இயலும் என்றும் அறிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்