புதுடெல்லி: நாடு முழுவதும் உள்ள 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இலவச மருத்துவச் சிகிச்சை அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை செவ்வாய்க்கிழமையன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு உட்பட 18 மாநிலங்களில் ரூ.12,850 கோடி மதிப்பிலான சுகாதார நலத் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அனைவரும் ரூ.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெற முடியும் என்றும் இத்திட்டத்தின் மூலம் ஏறக்குறைய 6 கோடி மூத்த குடிமக்கள் பயன்பெறுவர் என்றும் குறிப்பிட்டார்.
இத்திட்டத்தில் இணையும் மூத்த குடிமக்களுக்கு தனி காப்பீடு அட்டைகள் வழங்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், டெல்லி, மேற்கு வங்க மாநில அரசுகள் இத்திட்டத்தில் இணையாததால் அங்கு உள்ள மூத்த குடிமக்கள் இலவச மருத்துவச் சிகிச்சைத் திட்டத்தால் பயன்பெற முடியவில்லை என்றார்.
“நாடு முழுவதும் 7.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆயுர்வேத மருத்துவர்கள் சேவையாற்றி வருகின்றனர். ஏராளமான வெளிநாட்டினர் இந்தியாவில் அளிக்கப்படும் ஆயுர்வேத சிகிச்சையைப் பெறுவதற்காக வருகின்றனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஓலைச்சுவடிகள், செப்பேடுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் பாரம்பரிய மருத்துவத் தகவல்கள் செயற்கை நுண்ணறிவு மூலம் ஒன்றிணைக்கப்படும்,” என்றார் மோடி.
இத்தகைய நடவடிக்கைகளால் சுகாதாரத் துறையில் மிகப்பெரிய புரட்சிக்கு வித்திடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.