அமராவதி: ஆந்திராவில் வீடு கட்டுவதற்குப் பதிவு செய்யப்படும் அனைவருக்கும் இலவச மணல் வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதனால் ஏழை மக்கள் மேற்கொள்ளும் கட்டுமானப் பணிகளை பேரளவில் ஊக்குவிக்க முடியும் என முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, இலவச மணல் கொள்வனைத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது ஆந்திர அரசு. இத்திட்டத்தின்கீழ், கட்டுமானத்திற்கான மணல் குறிப்பிட்ட அளவு இலவசமாக வழங்கப்படும். மேலும், மணலைக் குறிப்பிட்ட இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணல் விலை உயர்வைத் தடுப்பதும் கட்டுமானத் தொழிலாளர்கள், ஏழைக் குடும்பங்களுக்கு எளிதாக மணல் கிடைக்கச் செய்வதும்தான் இத்திட்டத்தின் அடிப்படை நோக்கம் என்று ஆளுங்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இத்திட்டத்தின்படி, ஏழைகள் எந்தவிதக் கட்டுப்பாடும் இன்றி மணலைப் பெற முடியும். எனினும், இணையம் வழி இலவச மணலைப் பெற பதிவு செய்து, சட்டப்படி அனுமதி பெற வேண்டும்.
ஏற்கெனவே, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் ஆந்திராவில் உள்ள ஏழைக் குடும்பங்கள் வீடு கட்டுவதற்கு ரூ.2.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இது மணல் உள்ளிட்ட பொருள்களுக்கான செலவைக் குறைக்க உதவும் என்றாலும், நேரடியாக இலவச மணல் வழங்கப்பட மாட்டாது.
மேலும், ஊராட்சி அளவிலான பல்வேறு தேவைகளுக்காக அருகில் உள்ள ஆற்றங்கரைகளில் இருந்து இலவசமாக மணல் எடுக்கலாம் என்றும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.