உத்தரப் பிரதேசத்தில் 50,000 பெண் பட்டதாரிகளுக்கு இலவச ‘ஸ்கூட்டர்’

உத்தரப் பிரதேசத்தில் 50,000 பெண் பட்டதாரிகளுக்கு இலவச ‘ஸ்கூட்டர்’

கோப்புப் படம்: அமர் உஜாலா

06 Oct 2026 - 3:21 pm

1 mins read

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் நடப்புக் கல்வியாண்டில் இளங்கலைப் பட்டம் பெற்ற 50,000 பெண் பட்டதாரிகளுக்கு அடுத்த மாதம் இலவச இருசக்கர வாகனங்கள் (ஸ்கூட்டர்) வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

லக்னோவில் நடைபெற்ற கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய முதல்வர், ‘ராணி லட்சுமிபாய் ஸ்கூட்டி திட்டத்தின்’ கீழ் 2025-26ஆம் கல்வியாண்டில் தேர்ச்சியடைந்த மாணவிகளுக்கு இந்த இலவச வாகனங்கள் விநியோகிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

நடப்பு நிதியாண்டில் 9, 10ஆம் வகுப்புகளைச் சேர்ந்த 4.6 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் வங்கிக்கணக்குகளில் ரூ.148 கோடிக்கும் அதிகமான கல்வி உதவித்தொகை, கட்டணத் தொகை நேரடியாகச் செலுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இடைத்தரகர்களின் தலையீடு இன்றி, மாணவர்களின் பயணச்செலவைக் குறைக்கும் வகையில் பணப்பரிமாற்றம் முற்றிலும் வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினார்.

இந்திய அளவிலான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் உத்தரப் பிரதேச மாநில இளையர்கள் இனி பிற மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் அவர்களுக்கு அம்மாநிலத்திலேயே சிறந்த பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்