புதுடெல்லி: விமானங்களில் குறைந்தது 60 விழுக்காட்டு இருக்கைகளைக் கட்டணமின்றி வழங்க வேண்டும் என்ற இந்திய அரசின் முடிவிற்கு, இண்டிகோ, ஏர் இந்தியா, ஸ்பைஸ்ஜெட் ஆகிய விமான நிறுவனங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அம்முடிவை மீட்டுக்கொள்ள வேண்டும் என்று அம்மூன்று விமான நிறுவனங்களும் அடங்கிய இந்திய விமான நிறுவனங்கள் கூட்டமைப்பு (எஃப்ஐஏ), பொது விமானப் போக்குவரத்து அமைச்சு வலியுறுத்தியுள்ளன.
கூடுதல் கட்டணம் செலுத்தாமல் விமானங்களில் குறைந்தது 60 விழுக்காட்டு இருக்கைகளைப் பயணிகளே தேர்வுசெய்துகொள்ள மார்ச் 18ஆம் தேதி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு வழிவகுத்தது.
அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தும்படி விமான நிறுவனங்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிடுமாறு பொது விமானப் போக்குவரத்து இயக்ககத்திற்கு (டிஜிசிஏ) அமைச்சு அறிவுறுத்தி இருந்தது.
இந்நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து விமானப் போக்குவரத்துத் துறைச் செயலாளர் சமீர் குமாருக்கு எஃப்ஐஏ மார்ச் 19ஆம் தேதி ஒரு கடிதம் எழுதியது.
அதில், 60 விழுக்காட்டு இருக்கைகளைக் கட்டணமின்றி வழங்குவது விமானப் போக்குவரத்துத் துறையில் விரும்பத்தகாத, மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
“அதனால் விமான நிறுவனங்களுக்குக் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும். தங்களின் வருவாய் இழப்பை ஈடுகட்ட நிறுவனங்கள் விமானப் பயணக் கட்டணங்களை உயர்த்த வேண்டியிருக்கலாம்.
“அதன் விளைவாக, முன்கூட்டியே இருக்கைகளைத் தேர்வுசெய்ய விரும்பாத பயணிகளும் கூடுதல் கட்டணம் செலுத்த நேரிடலாம்,” என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பொதுவாக, முன்வரிசை, கால் நீட்ட கூடுதல் இடம் உள்ளிட்ட காரணிகளைப் பொறுத்து, விமான நிறுவனங்கள் இருக்கைகளைத் தேர்வுசெய்வதற்கு ரூ.200 முதல் ரூ.2,100 வரை கட்டணம் வசூலித்து வருகின்றன.
இதனிடையே, மத்திய கிழக்கில் நடந்துவரும் சண்டையால் அதிகரித்துவரும் விமான எரிபொருள் விலை உள்ளிட்ட நடைமுறைச் சவால்களையும் எஃப்ஐஏ தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

