புதுடெல்லி: இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் தடையற்ற வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திடத் திட்டமிட்டுள்ளன.
அதை முன்னிட்டு ஐரோப்பிய மன்றத் தலைவர் அன்டோனியோ கொஸ்டா இந்தியா சென்றுள்ளார். இதன் தொடர்பில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இருதரப்புக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வந்துள்ளது.
திங்கட்கிழமை (ஜனவரி 26) இந்தியக் குடியரசு தினக் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன. திரு கொஸ்டாவும் ஐரோப்பிய குழுமத் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயனும் கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்வர்.
அதற்குப் பிறகு செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) ஐரோப்பிய ஒன்றிய-இந்திய உச்சநிலைச் சந்திப்பு நடைபெறும். அதில் இருதரப்பும் தடையற்ற வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திட எண்ணம் கொண்டுள்ளன.
இது, எல்லா ஒப்பந்தங்களுக்கும் ‘முதன்மை’ ஒப்பந்தமாக அழைக்கப்படுகிறது.
“செவ்வாய்க்கிழமை நடைபெறும் 16வது ஐரோப்பிய ஒன்றிய-இந்திய உச்சநிலைச் சந்திப்பில் கலந்துகொள்ள தலைவர் கொஸ்டா புதுடெல்லி சென்றுள்ளார்,” என்று ஐரோப்பிய ஒன்றிய மன்றம் எக்ஸ் தளத்தில் தெரிவித்தது.
“ஐரோப்பிய ஒன்றிய-இந்திய உத்திபூர்வப் பங்காளித்துவத்தை மேம்படுத்திக்கொள்ளவும் முக்கிய சட்டங்களின் தொடர்பில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இந்த உச்சநிலைச் சந்திப்பு ஒரு வாய்ப்பாக அமையும்,” என்றும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

