அமராவதி: ஆந்திராவில் அரசுப் பேருந்துகளில் இனி மாற்றுத்திறனாளிகள் இலவசமாகப் பயணம் மேற்கொள்ளலாம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்களுக்கும் இத்திட்டத்தின்கீழ் 50 விழுக்காடு கட்டணச் சலுகை வழங்கப்பட்ட உள்ளது.
இத்திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு புதன்கிழமை (மார்ச் 18) தொடங்கி வைத்தார்.
பல்வேறு இந்திய மாநிலங்களில் தொடர்ந்து பல இலவசத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் மேற்கொள்ள முடியும். அதேபோல் டெல்லியில் பெண்கள் மட்டுமல்லாமல் திருநங்கைகளும் இலவசப் பேருந்துப் பயணம் மேற்கொள்ளும் வகையில், அத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஆந்திராவில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெலுங்கு தேசம் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது.
அதை நிறைவேற்றும் வகையில், ‘திவ்யாங் சக்தி’ என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவசப் பயணத் திட்ட தொடக்கவிழா மங்களகிரியில் நடைபெற்றது.
அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
தொடர்புடைய செய்திகள்
பின்னர் முதல்வர் சந்திரபாபுவும் துணை முதல்வர் பவன்கல்யாணும் அரசுப் பேருந்தில் இலவசப் பயணச்சீட்டை விநியோகித்தனர்.
மேலும், குறிப்பிட்ட தூரம் வரை அப்பேருந்திலேயே பயணம் செய்தனர்.
அப்போது ஆந்திர அரசு செயல்படுத்தி வரும் பல திட்டங்கள் குறித்து இருவரும் பொதுமக்களுடன் கலந்துரையாடியதாக ஆந்திர அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

