சாலை விபத்துகளில் சிக்குவோர்க்கு இலவச சிகிச்சை

1 mins read
6d8af832-4805-43c8-8a36-d3fe14357704
இலவசத் திட்டத்தைக் கண்காணிக்க 17 பேர் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. - சித்திரிப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: சாலை விபத்துகளில் சிக்குவோர்க்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அரசாணை வெளியிட்டுள்ள நிலையில், இந்த ஆணை கடந்த திங்கட்கிழமை (மே 5) முதல் அமலுக்கு வந்தது.

விபத்தில் சிக்கியவர்களுக்கு முதல் ஏழு நாள்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.1.5 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை தரப்படும் என்றும் எந்த வாகனம், சாலையாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக, ரூ.5 லட்சம் வரை இலவச சிகிச்சை வழங்கப்படும்.

இலவசத் திட்டத்தைக் கண்காணிக்க 17 பேர் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறையின் கூடுதல் செயலாளர் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

தமிழகத்தைப் பொருத்தவரை, கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதற்கொண்டே ‘நம்மை காக்கும் 48’ என்ற திட்டத்தில் இலவச சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோல் காப்பீட்டுத் திட்டம் உட்பட பல்வேறு புதிய திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அறிவித்து வருகின்றன. இந்தியாவில் நாள்தோறும் நிகழும் சாலை விபத்துகளில் நூற்றுக்கணக்கானோர் பலியாகின்றனர்.

வசதி இல்லாதவர்கள் சிகிச்சை பெற பணமின்றி உயிரிழக்க நேரிடுகிறது. இதை கவனத்தில்கொண்டு மத்திய, மாநில அரசுகள் இலவச சிகிச்சை திட்டத்தை செயல்படுத்துகின்றன. இதுபோன்ற திட்டங்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்