உள்நாட்டு விமானப் பயணங்களில் இலவச வைஃபை இணையச் சேவை வழங்கும் இந்தியாவின் முதல் விமான நிறுவனமாக ஏர் இந்தியா விளங்குவதாக புதன்கிழமை (ஜனவரி 1) அது அறிவித்தது.
ஏர்பஸ் ஏ350, போயிங் 787-9, குறிப்பிட்ட ஏர்பஸ் ஏ321 நியோ விமானங்களில் பயணிகள் 10,000 அடி உயரத்தில் இணையத்தைப் பயன்படுத்தவோ, தங்கள் அன்புக்குரியவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பவோ, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தவோ முடியும் என்று ஏர் இந்தியா அதன் செய்தி அறிக்கையில் தெரிவித்தது.
மடிக்கணினிகள், கைக்கணினிகள், iOS அல்லது ஆண்ட்ராய்ட் தளத்தில் இயங்கும் திறன்பேசிகள் உட்பட வைஃபை வசதியுடைய சாதனங்களில் இணையச் சேவை கிடைக்கும்.
நியூயார்க், லண்டன், பாரிஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட ஏர் இந்தியாவின் அனைத்துலகப் பயணப் பாதைகளில் நடத்தப்பட்ட முன்னோட்டத் திட்டத்தைத் தொடர்ந்து இச்சேவை அறிமுகம் கண்டுள்ளதாக அது தெரிவித்தது.