கப்பல் போக்குவரத்தின் சுதந்திரம் அவசியம்: ஜெய்சங்கர்

கப்பல் போக்குவரத்தின் சுதந்திரம் அவசியம்: ஜெய்சங்கர்

2 mins read
ஜி7 மாநாட்டில் ஜெய்சங்கர் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து வலியுறுத்தினார்.
26ada844-d56c-4885-9f5f-285424343fa0
உலக நாடுகள் எதிர்கொண்டுள்ள பல்வேறு அச்சுறுத்தல்கள், இறையாண்மை குறித்து வெளியுறவு அமைச்சர்கள் விவாதித்ததாக ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். - படம்: பிடிஐ

புதுடெல்லி: உலகப் பொருளியல் பாதுகாப்புக்கு கப்பல் போக்குவரத்து சுதந்திரமாக நடைபெறுவது அவசியம் என இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

‘ஜி7’ வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு பிரான்சில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஜெய்சங்கர், முக்கியக் கனிமங்கள் தொடர்பிலான ஒத்துழைப்பு மிக அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

இந்த ஒத்துழைப்புக்கான நடவடிக்கைகளைப் பாராட்டிய அவர், போதைப்பொருள், பயங்கரவாதத் தொடர்புகளின் அச்சுறுத்தல் குறித்தும் ஜி7 வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டதாக தமது சமூக ஊடகப் பதிவு ஒன்றில் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். மேலும், உலக நாடுகள் எதிர்கொண்டுள்ள பல்வேறு அச்சுறுத்தல்கள், இறையாண்மை குறித்து வெளியுறவு அமைச்சர்கள் விவாதித்ததாக அவர் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மாநாட்டின்போது ஐநா பாதுகாப்பு மன்றத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள், அமைதி காக்கும் நடவடிக்கைகளை நெறிப்படுத்துதல், மனிதாபிமான விநியோகத் தொடர்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் அவசரத் தேவையை வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் வலியுறுத்தினார். மேலும், உலகளாவிய நிர்வாகச் சீர்திருத்தம் குறித்துப் பேசியதாகவும் டாக்டர் ஜெய்சங்கர் தமது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். எரிசக்தி சவால்கள், உர விநியோகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்து உலக தென்பகுதி நாடுகள் எழுப்பியுள்ள கவலைகளை அவர் எடுத்துரைத்தார்.

முன்னதாக, அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவைச் சந்தித்துப் பேசினார் திரு ஜெய்சங்கர்.

இருதரப்புக்கும் இடையே பயனுள்ள பேச்சுவார்த்தை நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சவூதி அரேபியா வெளியுறவு அமைச்சர் ஃபைசல் பின் ஃபர்ஹானையும் திரு ஜெய்சங்கர் சந்தித்தார் என்றும் அப்போது மத்திய கிழக்கு விவகாரம் தொடர்பாக அவர் ஆலோசனை நடத்தினார் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

இத்தாலி துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான அன்டோனியோ தஜானி, ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவர் காஜா கல்லாஸ், உக்ரேன், ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர்களையும் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்