இம்பால்: வடகிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரின் சேனாபட்டி மாவட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது.
இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையின்போது மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) வீரர் காயமடைந்தார். வன்முறையாளர்கள் ஏராளமான வீடுகளையும் தீவைத்து எரித்தனர்.
மணிப்பூரில் கடந்த 2023 மே மாதம் முதல் நிகழ்ந்துவரும் இன மோதல் சம்பவங்களில் இதுவரை 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர்.
வீடிழந்த ஆயிரக்கணக்கானோர் கடந்த மூன்று ஆண்டுகளாக அரசின் நிவாரண முகாம்களிலேயே தங்கியுள்ளனர்.
மைதேயி சமூகத்தினர் மற்றும் குக்கி பழங்குடியினர் இடையிலான மோதலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில் குக்கி மற்றும் நாகா பழங்குடியினர் இடையேயும் அவ்வப்போது மோதல்கள் நிகழ்கின்றன.
இந்நிலையில், காங்போக்பி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் வன்முறையாளர்கள் சில வீடுகளைத் தீவைத்து எரித்தனர்.
இதையடுத்து, அப்பகுதி மக்கள் எதிர்த்தரப்பினர் வாழும் பகுதியில் உள்ள வீடுகளை அதிகாலை 4 மணியளவில் தீவைத்துக் கொளுத்தினர். திங்கட்கிழமை காலையில் இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை ஏற்பட்டது.
இதில் வன்முறையைக் கட்டுப்படுத்தும் பணியில் இருந்த சிஆர்பிஎஃப் வீரர் குண்டு பாய்ந்து காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த வன்முறைகளை அடுத்து அப்பகுதியில் கூடுதல் வீரர்கள் குவிக்கப்பட்டனர். தற்போது வன்முறை முடிவுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


