புதுடெல்லி: இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளது. இதனால் அங்குப் பதற்றமான சூழ்நிலை தொடர்கிறது.
வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) அன்று இரண்டு சமூகப் பிரிவுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதில் துப்பாக்கிகளும் பயன்படுத்தப்பட்டன. அந்த மோதலில் மூவர் கொல்லப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் 2023ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 60,000 பேர் தங்களுக்குச் சொந்தமான இடங்களிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதனால் அங்கு மிகப் பெரிய கலவரம் வெடித்தது.
அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அங்கு அமைதி ஏற்பட்டு வந்த நிலையில் ஏப்ரல் மாதம் முதல் பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகிறது.
கலவரத்திற்கு முக்கியக் காரணம் இந்து மெய்தி சமூகத்தினருக்கும் கிறிஸ்துவத்தை அதிகம் வழிபடும் குக்கி சமூகத்தினருக்கும் இடையே உள்ள பகைதான். மணிப்பூரில் மெய்தி சமூகத்தினர் அதிகமாக உள்ளனர்.
இந்த இரு சமூகத்தினருக்கும் இடையே நடந்த மோதலில் இதுவரை 250க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர்.
“வெள்ளிக்கிழமை இரு பிரிவினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சூடு நடந்தது. துப்பாக்கித் தோட்டாக்களால் காயம் ஏற்பட்டு மூவர் உயிரிழந்தனர்,” என்று காவல்துறையினர் அறிக்கையில் குறிப்பிட்டனர்.
உக்ருல் மாவட்டத்தில் உள்ள முள்ளாம் கிராமத்தில் கலவரம் ஏற்பட்டது. உயிரிழந்தவர்கள் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்த தகவலை அதிகாரிகள் வெளியிடவில்லை.
தொடர்புடைய செய்திகள்
“உக்ருல் வட்டாரத்தில் மீண்டும் எந்தவிதமான மோதல்கள் ஏற்படாதவாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கண்காணிப்புப் பணிகள் தொடர்கிறது,” என்று காவல்துறை தெரிவித்தது.
மெய்தி சமூகத்தினருக்கும் குக்கி சமூகத்தினருக்கும் இடையே ஏற்படும் மோதலுக்கு முக்கியக் காரணங்களாக நிலமும் வேலை வாய்ப்பும் உள்ளது. இது பல ஆண்டுகளாகத் தொடர்கிறது.
உள்ளூர் அரசியல் தலைவர்கள் தங்களது அரசியல் லாபத்திற்காக இரு சமூகத்தினரிடையே மோதல்களை உருவாக்குகின்றனர் என்று சமூக ஆர்வலர்கள் குறைகூறுகின்றனர்.

