பேரணிக்கு முன் சிஜேபி தலைவர் வீட்டில் காவல்துறை

டெல்லியில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குறிப்பு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

பேரணிக்கு முன் சிஜேபி தலைவர் வீட்டில் காவல்துறை

படம்: பிடிஐ

16 Oct 2026 - 6:32 pm

2 mins read

புதுடெல்லி: டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) வெள்ளிக்கிழமை (அக்டோபர் 16) பேரணியை தொடங்குவதற்கு முன்னதாக, அதன் நிறுவனர் அபிஜித் தீப்கேவின் இல்லத்திற்கு டெல்லி காவல்துறையினர் சென்று அழைப்பாணை வழங்கினர்.

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக வாக்காளர் பட்டியல் முறைகேடு புகார்களை முன்வைத்து கன்னாட் பிளேஸ் பகுதியில் தேசியக் கொடியை ஏந்திப் போராட்டம் நடத்த சிஜேபி அழைப்பு விடுத்திருந்தது.

தீப்கேவின் வீட்டிற்குச் சென்ற காவல்துறையினர் அவர் சமூக ஊடகங்களில் வன்முறையைத் தூண்டுவதாகக் கூறி அழைப்பாணை அளித்தனர்.

அதற்குப் பதிலளித்த 31 வயதான தீப்கே, "என்னைத் தூக்கிலிடுங்கள். நான் வன்முறையைத் தூண்டியதற்கு ஒரே ஒரு காணொளியையாவது உங்களால் காட்ட முடியுமா?" என்று காவல்துறையினரிடம் விவாதித்தார்.

தேசியக் கொடியை ஏந்துவது குற்றமல்ல என்றும், ஆனால் அனுமதி பெறாத பேரணிகளும் கூட்டங்களும் தடையை மீறுவதாகும் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். கன்னாட் பிளேஸ் பகுதியில் தடை உத்தரவு அமலில் உள்ளதையும் சுட்டினர்.

சிஜேபியின் தேசியக் கொடி பேரணி அறிவிப்பைத் தொடர்ந்து, டெல்லியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, பலத்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களைத் தடுக்க ஆயிரக்கணக்கான காவல்துறையினர் கன்னாட் பிளேஸ் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கண்காணிப்பிற்காக 35 கூடுதல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கன்னாட் பிளேஸ், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 16, 17 ஆகிய தேதிகளில் அப்பகுதி மூடப்படும் என புதுடெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. தடையை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

முன்னதாகப் செய்தியாளர்களிடம் பேசிய தீப்கே, தங்கள் போராட்டம் மகாத்மா காந்தி, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கொள்கைகளின் அடிப்படையில் அமைதியான முறையில், கேள்வி கேட்கும் நடவடிக்கை என்று விளக்கமளித்தார்.

கடந்த ஆண்டு முதல் 130 மில்லியனுக்கும் அதிகமான பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதைக் கண்டித்து இளைஞர்கள் நடத்தி வரும் இந்தப் போராட்டம் நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது.

தொடர் போராட்டங்களால் தங்களின் வணிகம், வாழ்வாதாரம்,போக்குவரத்து பாதிக்கப்படுவதாகக் கன்னாட் பிளேஸ் வணிகர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்