புதுடெல்லி: ஐரோப்பிய யூனியனின் புதிய விசா நடைமுறையை இந்தியா வரவேற்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புதிய நடைமுறையானது இந்தியாவின் திறமையான இளையர்களுடைய திறன்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் உர்சுலா வோன் டெர் லியென், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இந்த ஆண்டுக்குள் இறுதி செய்வது தொடர்பாக இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிகிறது.
அந்த ஒப்பந்தத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் கையெழுத்திட இரு தலைவர்களும் உறுதி பூண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பின்னர் இருவரும் செய்தியாளர்களிடம் பேசினர்.
அப்போது, 2025ஆம் ஆண்டுக்குப் பிந்தைய காலக்கட்டத்தில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் ஒத்துழைப்புக்கான வலுவான பாதையை உருவாக்க தற்போது முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இருதரப்புக்கும் இடையிலான உச்ச நிலை மாநாட்டின்போது இது அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
“இந்தியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையே சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிய நட்புறவு நீடித்து வருகிறது. வர்த்தகம், செயற்கை நுண்ணறிவு, தொழில்நுட்பம், முதலீடு, புதுமை கண்டுபிடிப்புகள், பசுமை எரிசக்தி, திறன்சார் மேம்பாடு, வாகனப் போக்குவரத்து, 6ஜி, சைபர் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, தீவிரவாத தடுப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பும் இணைந்து செயல்படும்.
“இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து பசுமை ஹைட்ரஜன் மன்றம், காற்றாலை எரிசக்தி வர்த்தக அமைப்பை உருவாக்கும். இந்தியா-மத்திய கிழக்கு - ஐரோப்பா பொருளியல் வழித்தட திட்டத்தை செயல்படுத்த தீவிரம் காட்டப்படுகிறது. இந்த வழித்தடம் அனைத்துலகப் பொருளியல் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக அமையும்,” என்றார் பிரதமர் மோடி.
தொடர்புடைய செய்திகள்
தற்போது விண்ணில் ஒரே நேர்கோட்டில் ஏழு கோள்கள் அணிவகுத்துள்ளதாகக் குறிப்பிட்ட திருவாட்டி உர்சுலா, அதேபோன்று பூமியில் இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒரே நேர்கோட்டில் அணிவகுத்துள்ளதாக வர்ணித்தார்.
இந்தியா, ஐரோப்பிய ஒன்றியத்தின் நம்பகமான நட்பு நாடு என்றும் இருதரப்பு வர்த்தகம் ஏற்கெனவே அபரிதமாக வளர்ச்சி அடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“இந்த ஆண்டு இறுதிக்குள் இருதரப்பு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும். இந்தியாவின் மின்னிலக்கத் தொழில்நுட்பங்கள் வியக்க வைக்கின்றன. வர்த்தகம், தொழில்நுட்பம், விண்வெளி, செயற்கை நுண்ணறிவு, தீவிரவாத தடுப்பு, இணையப் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஒன்றிணைந்து செயல்படும்,” என்றார் உர்சுலா.

