மாஸ்கோ: ரஷ்யாவின் எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையங்கள்மீது உக்ரேனியப் படையினர் மாதக்கணக்கில் நடத்திய வானூர்தித் தாக்குதலால் மாஸ்கோவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பற்றாக்குறையைச் சமாளிக்க இந்தியாவிடமிருந்து ரஷ்யா பெட்ரோலை இறக்குமதி செய்யும் என்று ரஷ்யத் தகவல் ஒன்றை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய எண்ணெய் வளங்களைக் குறிவைத்து நீண்டதூரத்திலிருந்து தாக்குதல் நடத்தக்கூடிய வானூர்திகளை உக்ரேன் பயன்படுத்தி வருகிறது. அதன் காரணமாக ரஷ்யாவின் எரிசக்தி உள்கட்டமைப்பு சீர்குலைந்து அதன் 11 மண்டலங்களில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அதனால், எரிபொருள் விநியோகத்தில் கட்டுப்பாடு, பெட்ரோல் விலை உயர்வு போன்றவற்றை ரஷ்யர்கள் சந்தித்து வருகின்றனர். ஓட்டுநர்கள் தங்களது வாகனங்களுடன் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
பிரச்சினையைச் சமாளிக்க இந்தியாவிலும் பிற நாடுகளிலும் இருந்து கட்டுப்படியாகக்கூடிய விலையில் எரிபொருளை இறக்குமதி செய்வது பற்றி ரஷ்யா பரிசீலித்து வருவதாக கிரெம்ளின் மாளிகைப் பேச்சாளர் மிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.
அது தொடர்பாக சில நாடுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதை அவர் உறுதிசெய்தார்.
“இந்த நடவடிக்கை எரிபொருள் சந்தையை நிலைப்படுத்துவதை நோக்கிய மற்றொரு முயற்சி. மேலும், பீதியினால் ஏற்படும் மிதமிஞ்சிய கொள்முதலைக் குறைக்கும் நோக்கம் கொண்டது அது,” என்றார் அவர்.
அவர் இவ்வாறு கூறினாலும், ரஷ்யாவின் எரிசக்தி அமைச்சோ இந்தியாவின் பெட்ரோலிய, எரிவாயு அமைச்சோ எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.
ரஷ்யாவிடமிருந்து நாளொன்றுக்கு 2.6 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியா ஜூன் மாதம் இறக்குமதி செய்ததாக அண்மையில் செய்தி வெளியான நிலையில், தற்போது வெளியான தகவல் அதற்கு நேர்மாறாக உள்ளது.

