புதுடெல்லி: எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து, இணையம் வழி வாங்கப்படும் உணவு, பொருள்களை விநியோகிக்கும் ஊழியர்கள் சனிக்கிழமை (மே 16) ஐந்து மணிநேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சனிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை இந்தப் போராட்டம் நடைபெற்றதாக இணையம் வழி வாங்கப்படும் பொருள்களை விநியோகிக்கும் ஊழியர்களுக்கான சங்கத்தின் (GIPSWU) தலைவர் சீமா சிங் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் 1.2 கோடி தற்காலிகப் பணியாளர்கள் இருசக்கர வாகனங்களை நம்பி தங்களது அன்றாட வருமானத்தை ஈட்டி வருகின்றனர். எரிபொருள் விலை உயர்வு அவர்களைக் கடுமையாகப் பாதிக்கும் என்றும் ஏற்கெனவே பணவீக்கம், கடும் வெப்பத்தால் தவிக்கும் தொழிலாளர்களுக்கு இந்த எரிபொருள் விலை உயர்வு ஒரு பலத்த அடி என்று சீமா சிங் கூறியுள்ளார்.
இதையடுத்து, ஐந்து மணி நேர வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டது. அச்சமயம் பாதிக்கப்பட்ட ஊழியர்கள், அலுவலகப் பயன்பாட்டுக்கான தங்கள் கைப்பேசி செயலிகளை முடக்கி வைத்தனர். இதனால் இணையம் வழி பொருள்கள் வாங்குவோர்க்குச் சிரமம் ஏற்பட்டது.
சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஸ்விகி, ஸோமேட்டோ, பிளிங்கிட், ஸெப்டோ உள்ளிட்ட தளங்களின் இணைவழிச்சேவை பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் ஒரு லிட்டர் எரிபொருள் விலை சுமார் 3 ரூபாய் உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு கிலோ மீட்டருக்கான சேவைக் கட்டணத்தை அரசும் முக்கிய மின்னிலக்கத் தளங்களும் உடனடியாக உயர்த்த வேண்டும் எனத் தற்காலிகப் பணியாளர்கள் வெள்ளிக்கிழமை கோரிக்கை விடுத்தனர்.

